திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
செவ்வாய்கிழமையன்று, திருகோணமலை சிவன் கோவில் முன்பாக, மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தின்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, தமிழர்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிப்பு, பாதுகாப்பு போன்ற விடயங்களில் தமிழ் அரசியல் தலைமைகள் செயல்பாடுகள் மீதான அதிருப்தி ஆகியவற்றின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கூறுகின்றது.
இது தொடர்பாக தமிழ் அரசியல் தலைமைகள் மீது தொடர்ந்தும் தாங்கள் நம்பிக்கை கொள்ளத் தயாராக இல்லை என இந்தச் சங்கத்தின் தலைவியான ஜெயலட்சுமி தேவி நாகேந்திரன் தெரிவித்தார்.
ஆனால், இந்த தீர்மானத்தில் தமிழ் அரசியல் கட்சியொன்றின் பின்புலம் இருப்பதாக சிலர் கூறினாலும், தங்களது இந்த தீர்மானம் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கோ தமிழ் கட்சிகளுக்கோ முன்கூட்டியே அறிவிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என்று ஜெயலட்சுமி தேவி கூறினார்.
இந்த முடிவின் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் சில வேளை தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகவோ, குறையவோ செய்யலாம் என சுட்டிக்காட்டப்படுவது பற்றி அவரிடம் கேட்டபோது, தமிழர் பிரதிநிதிகள் இருந்தும் இதுவரை எதுவும் நடந்ததாக இல்லை என தனது பதிலில் அவர் கூறினார்.