நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பபா பளிஹவதன தெரிவித்தார்.
மேலும், கடந்த ஏழு வருடங்களின் பின் டெங்கு நோய் குறைந்துள்ளதாகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த ஏழு மாதங்களில் மாத்திரம் கொழும்பு மாவட்டத்தில் 5178 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2379 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 886 பேரும் கண்டி மாவட்டத்தில் 742 பேரும் யாழ்ப்பாணத்தில் 1163 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1284 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 849 பேரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, புத்தளம், அனுராதபுரம், குருநாகல், யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை, கண்டி ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
குறிப்பாக தங்கள் வீடுகள், கட்டிடங்களை அடிக்கடி சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயை கட்டுப்படுத்தலாம் எனவும் இரண்டு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் நீடித்தால் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடுமாறும் பபா பளிஹவதன மக்களிடம் கேட்டுக் கொண்டார்.