திருமண கொண்டாட்டமொன்றின் போது வேடிக்கைக்காக தீர்க்கப்பட்ட துப்பாக்கி ரவையொன்று, அங்கிருந்து இரு மைல் தொலைவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் தலையில் பாய்ந்த சம்பவம் ஓமானில் இடம்பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஸெய்னப் என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி சிறுமி, வட ஓமானில் முஸன்டம் எனும் இடத்திலுள்ள ஹோட்டலுக்கு வெளியில் தனது சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்ட ஸெய்னப்பிற்கு அவசர சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள், அவரது இடது கண்ணுக்குப் பின்புறமாக ஊடுருவியிருந்த துப்பாக்கி ரவையை பெரும் சிரமத்தின் மத்தியில் அகற்றியுள்ளனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் திருமணங்கள் போன்ற வைபவங்களின் போது துப்பாக்கி ரவைகள் தீர்க்கப்படுவது வழமையாகும்.கடந்த வருடம் மேற்படி சம்பவத்தையொத்த அனர்த்தங்களில் சிக்கி இரு ஓமானிய பிரஜைகள் உயிரிழந்திருந்தனர்.