வட மேற்கு கொலம்பியாவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் குறைந்தது 16 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலியாகியுள்ளனர். அந்தப் பிராந்தியத்தில் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டிருந்த உஸுகா குழுவின் தலைவர்களில் ஒருவரைக் கைதுசெய்வதற்கு பொலிஸார் சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அந்த உலங்குவானூர்தி பின்தங்கிய அன்தியோகுயியா மலைப் பிராந்தியத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.தாழப் பறந்த மேற்படி உலங்குவானூர்தி முகில் கூட்டம் காரணமாக பார்வைப் புலன் தெளிவற்ற நிலையில் மலைப் பகுதியில் மோதியுள்ளதாக தோன்றுவதாக கொலம்பிய பாதுகாப்பு அமைச்சர் லூயிஸ் கார்லொஸ் வில்லேகாஸ் தெரிவித்துள்ளார்.
எனினும் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையொன்று அந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானதாக கூறுகிறது.ஆரம்பத்தில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக வதந்திகள் பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போதைவஸ்து கடத்தல் தலைவரை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸாருக்கு உதவும் முகமாக ஏனைய இரு உலங்குவானூர்திகளில் பயணம் செய்த கிராமவாசிகள், அந்த உலங்குவானூர்தி மீது துப்பாக்கிப் பிரயோகம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த வாரம் கொலம்பிய கரிபியன் கடற்கரைப் பிராந்தியத்தில் இராணுவ உலங்குவானூர்தியொன்று விபத்துக் குள்ளானதில் 11 விமானப்படை வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.





