காதலில் விரக்தி : இளம்பெண் தற்கொலை!

859

depressed+and+suicidalஇருபது வயதுக்குள் ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேரைக் காதலித்து அவர்கள் இருவராலுமே கைவிடப்பட்ட இளம் பெண் ஒருவர் விரக்தியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.

பு.தயாரூபி (வயது 20) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார். இவரின் மரண விசாரணையை காத்தான்குடி வடக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் நடத்தினார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவரின் மாமியான செ. இரத்தினகுமாரி அவரின் சாட்சியத்தில் கூறியதாவது.

இறந்தவர் எனது சகோதரரின் மகள். இவர் கொத்தியாபுலை என்னும் இடத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து அவருடன் குடும்பம் நடத்தினார். ஆனால் பதிவுத் திருமணம் செய்யவில்லை. எட்டு மாதங்களின் பின்னர் கணவர் இவரைக் கைவிட்டுச் சென்று விட்டார். இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று இருக்கின்றது.

பின்னர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இன்னொரு இளைஞனைக் காதலித்தார். ஆனால் இளைஞனின் பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. அந்த இளைஞரையும் பதிவுத் திருமணம் செய்யாமலேயே எனது வீட்டுக்கு அழைத்து வந்து கடந்த மூன்று மாதங்களாக வாழ்ந்தார். இளைஞனின் பெற்றோர் தொடர்ந்து கரைச்சல் கொடுத்து வந்தனர்.

இறுதியாக காத்தான்குடி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கடந்த 2 ஆம் திகதி விசாரணைக்கு சென்றார். அங்கு பிரச்சினை எதுவும் இல்லை என்றும் இளைஞன் தன்னுடன் வாழ சம்மதம் தெரிவித்ததாகவும் திரும்பி வந்து என்னிடம் கூறினார்.

மீண்டும் விசாரணை என்று கூறி 4 ஆம் திகதி பொலிஸ் நிலையம் சென்றார். திரும்பி வந்தபோது வாந்தி எடுத்தார். நான் விசாரித்த போது விசாரணையில் இளைஞன் தன்னுடன் வாழ மறுப்பு தெரிவித்ததாகவும் அதனால் அலரி விதையை சாப்பிட்டு விட்டதாகவும் சொன்னார். பின்னர் அவரை அழைத்துச் சென்று ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்தோம். மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமானார் என்றார்.

இறந்தவரின் தாயாரான பு. திருமலர் என்பவரும் சாட்சியமளித்தார். பிரேத பரிசோதனை செய்த டாக்டர் எச்.எம்.ஏ.எஸ். தர்மசேன நஞ்சுண்டதால் உள்ளுறுப்புகள் செயலிழந்து மரணம் சம்பவித்ததாக அறிக்கை சமர்ப்பித்தார். தற்கொலை மரணம் என்று மரண விசாரணை அதிகாரி ச.கணேசதாஸ் தீர்ப்பு வழங்கினார்.