இந்திய – நேபாள பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு!!

693

1867ohajiw8xjpng

இந்திய – நேபாள பகுதியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் நேபாளத்தில் மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தாலும், கண்டத் தட்டு நகர்வினால் பூமிக்கடியில் ஏற்பட்டிருந்த அழுத்தம் முழுமையாக வெளியாகவில்லையென்றும், அந்த அழுத்தத்தின் ஒரு பகுதி மேற்கு நோக்கித் தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அதாவது நேபாளத்தின் பொகாராவுக்கு மேற்கேயும் டெல்லிக்கு வடக்கேயும் அமைந்துள்ள பகுதியில் இந்த அழுத்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல்கள் நேச்சர் ஜியோ சயின்ஸ் மற்றும் சயின்ஸ் சஞ்சிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்கு நேபாளத்திலும் வட இந்தியாவிலும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வசிப்பதால், இங்கு பூகம்பம் வந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது எனக் கூறுகிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷான் ஃபிலிப்.

இந்தியக் கண்டத் தகடானது, யூரேசிய கண்டத் தகடோடு மோதுவதால் இந்த பூகம்பம் ஏற்பட்டது. இப்போதும் அந்தப் பகுதியில் நிலமானது வருடத்திற்கு 2 சென்டிமீட்டர் என்ற அளவில் நகர்ந்துகொண்டேயிருக்கிறது.

இந்த நகர்வின் காரணமாக பிரதான இமாலய கண்டப் பிளவில் பெரும் அழுத்தம் ஏற்படுகிறது. இந்த கண்டப் பிளவானது நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவுக்கு மிக அருகில் அமைந்திருக்கிறது.

இந்தியக் கண்டத் தகடும் யூரேசியக் கண்டத்தகடும் தற்போது மிக நெருக்கமாக, நகரமுடியாதவகையில் இருக்கின்றன. இதனால், இந்தத் தகடுகளின் அடியில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் வெளியேற ஒரு நிலநடுக்கம் தேவைப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில், இம்மாதிரி உருவான அழுத்ததில் ஒருபகுதியே வெளியேறியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

முழு அழுத்தமும் வெளியேறியிருந்தால், அது மிகப்பெரிய நிலநடுக்கமாக இருந்திருக்கும். ஆகவே இந்தப் பகுதியில் ஒரு பெரும் நிலநடுக்கம் எதிர்காலத்தில் நிச்சயம் ஏற்படும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1505ல் இதே போல ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்படுமானால், அந்த நிலநடுக்கம் 8.5 ரிக்டார் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்த நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்பதை இப்போது சொல்ல முடியாது விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.