
சிட்னி ஒலிம்பிக் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 14ஆவது உலகக் கிண்ண வலை பந்தாட்டப் போட்டிகளில் குழு C யில் பங்குபற்றிவரும் இலங்கை தனது கடைசி லீக் போட்டியில் தென்னாபிரிக்காவை இன்று சந்தித்தது.
இந்தப் போட்டி ஆல்ஃபோன்ஸ் விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி இன்று காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது.
ஏற்கனவே இரண்டு போட்டிகளில் சிங்கப்பூரிடமும் மலாவியிடமும் தோல்வி அடைந்துள்ள இலங்கை இன்றைய போட்டியில் தென்னாபிரிக்காவை வெற்றிகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படவில்லை.
மலாவிக்கு எதிராக நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியில் இரண்டு வீராங்கனைகள் உபாதைக்குள்ளான நிலையில் 12 வீராங்கனைகளையும் பயிற்றுநர் தீப்தி அல்விஸ் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சகல வீராங்கனைகளுக்கும் அனுபவத்தைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் எல்லோருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டதாக பயிற்றுநர் தீப்தி அல்விஸ் கூறினார். உலக வலைப்பந்தாட்டத் தரப்படுத்தலில் 5ஆம் நிலைக்கு முன்னேறியுள்ள தென்னாபிரிக்காவை வீழ்த்துவது கடினமான விடயம். எனினும் மலாவியுடனான போட்டியில் இழைக்கப்பட்ட தவறுகளைத் திருத்திக்கொண்டு இந்தப் போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முதலிரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்ததன் காரணமாக கடைசி எட்டு அணிகளுக்கான தரப்படுத்தல் சுற்றில் விளையாடவுள்ள இலங்கை அந்த சுற்றில் சாதுரியத்துடன் விளையாட முயற்சிக்கும் என பயிற்றுநர் தெரிவித்தார்.
இதேவேளை நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை குழு ‘ஏ’யிற்கான தனது கடைசி லீக் போட்டியில் நேற்று சந்தித்த நியூஸிலாந்து 52 க்கு 47 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது. இதன் மூலம் கடந்த இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் அவுஸ்தி ரேலியாவிடம் அடைந்த தோல் விகளை நியூஸிலாந்து நிவர்த்தி செய்துகொண்டது.
Tags:





