
நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான பொர்னோவில் சனசந்தடிமிக்க சந்தையொன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 47 பேர் உயிரிழந்துள்ளதுடன் 52 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
வபொன் காரி நகரிலுள்ள ஜெபோ கால்நடைச் சந்தையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் ஏற்கனவே பொருத்தி வைக்கப்பட்டிருந்த குண்டைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதா அல்லது தற்கொலைக் குண்டுதாரியொருவரால் நடத்தப்பட்டதா என்பது அறியப்படவில்லை.
மேற்படி தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு குழுவும் உரிமை கோராத போதும் போகோ ஹராம் போராளிகளே காரணம் என நம்பப்படுகிறது.
அந்நாட்டின் புதிய ஜனாதிபதி முஹமது புஹாரி, மேற்படி போராளிக் குழுவை நசுக்கப் போவதாக சூளுரைத்திருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.





