உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மீண்டும் தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தவறிய இலங்கை, நேற்று நடைபெற்ற பார்படொஸுடனான குழு ‘எச்’ தகுதிகாண் சுற்றின் கடைசி லீக் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இப் போட்டியில் பார்படொஸ் 67–33 என்ற கோல்கள் அடிப்படையில் அமோக வெற்றிபெற்றது. இதில் கோல் போடுவதற்கு கிடைக்கப்பெற்ற 49 வாய்ப்புகளில் 16 வாய்ப்புகள் தவறவிட்டது இலங்கை அணி.
போட்டியின் முதலாவது கால் பகுதியில் ஒரு கட்டத்தில் 5 –4 என்ற கோல்கள் அடிப்படையில் இலங்கை முன்னிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இலங்கை வீராங்கனைகள் இழைத்த தவறுகளின் காரணமாக பார்படொஸ் 18 –12 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.
இப் பகுதியில் பார்படொஸ் 19 கோல்களைப் போட்டதுடன் இலங்கையினால் 5 கோல்களையே போட முடிந்தது. மூன்றாவது கால் பகுதியிலும் பார்படொஸின் திறமைக்கு ஈடுகொடுப்பதில் தடுமாறிய இலங்கை அப் பகுதியிலும் 8 க்கு 17 என்ற கோல்கள் அடிப்படையில் பின்னிலையில் இருந்தது.
கடைசி கால் பகுதியில் இரண்டு அணியினரும் ஓரளவு சமமாக விளையாடியதை அவதானிக்க முடிந்தது. எனினும் பார்படொஸ் 13 க்கு 8 என்ற கோல்கள் அடிப்படையில் முன்னிலை வகித்து ஒட்டுமொத்த நிலையில் 67 க்கு 33 என்ற கோல்கள் அடிப்படையில் இலகுவாக வெற்றிபெற்றது. அணித் தலைவி செமினி ஏகப்பட்ட தவறுகளை இழைத்தபோதிலும் அவரது தாயாரும் பயிற்றுநருமான தீப்தி அல்விஸ் அவரை மாற்றுவதற்கு முயற்சிக்கவில்லை. எனினும் போட்டி முடிவடைய 4 நிமிடங்கள் இருந்தபோது அவர் உபாதைக்குள்ளாகி அரங்கிலிருந்து மருத்துவ உதவிக் குழுவினரால் தூக்கிச் செல்லப்பட்டபோதே அவருக்குப் பதிலாக வேறொருவர் களமிறக்கப்பட்டார்.
இலங்கை சார்பாக ஹசித்தா மெண்டிஸ் 26 முயற்சிகளில் 17 கோல்களையும் திசலா அல்கம 19 முயற்சிகளில் 13 கோல்களையும் போட்டனர். உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் விளையாடுவோரில் மிகவும்
இளையவரான 17 வயதுடைய ஸெனிக்கா தோமஸ் 22 முயற்சிகளில் 15 கோல்களைப் போட்டமை விசேட அம்சமாகும். இலங்கையின் சகல போட்டிகளும் நேற்றுடன் நிறைவுபெற்றுள்ள நிலையில் கடைநிலை தரப்படுத்தலுக்கான இறுதிச் சுற்றில் இலங்கை நாளை விளையாடவுள்ளது.





