முதுகுவலி குணமாக வேண்டுமா?

487

பொதுவாக எல்லா நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத் தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக் கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும் சொல்வது டிஸ்க் எனப்படுகிற முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறு. அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என சொல்லப்பட்ட இந்தப் பிரச்னையிலிருந்து அறுவையின்றி மீள முடியும்.

முதுகுவலியால் அவதிப்படுகிற இளம் மற்றும் நடுத்தர வயதினரில் 40 சதவிகிதம் பேருக்கு முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறே காரணமாக இருக்கிறது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றால் என்ன செய்வது என மருத்துவரிடமே போகாமல், வலியைப் பொறுத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதைத் தீவிரமாக்கிக் கொண்டு வழி தெரியாமல் நிற்கிறவர்களே அதிகம்.

முதுகெலும்பு சவ்வு தவறாக உபயோகப்படுத்தப்படுவது, அந்தப் பகுதியில் நீர் தன்மை குறைவது, இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையிலிருந்து சவ்வானது விலகி, நரம்புப் பகுதியை அழுத்துவது போன்றவையே இதற்கான காரணங்கள். ஆரம்பக் கட்டத்தில் சிறியதாக உண்டாகிற வலி, நாள்பட, நாள்பட அதிகமாகி, நிரந்தர முதுகுவலியை உண்டாக்குவதோடு, கால் வலியையும் சேர்த்துக் கொடுக்கும்.

முன்பு இருந்த மாதிரி இந்த வகையான முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு எனப் பயப்பட வேண்டாம். மிகவும் முற்றிய நிலையில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட முதுகுவலி சவ்வுப் பிரச்னைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

ஊசியின் மூலம் ஓஸோன் செலுத்தி சவ்வை சுருங்க வைப்பது, ரேடியோ கதிர்களைச் செலுத்தி, சவ்வை அகற்றுவது என பலமுறைகளில் குணப்படுத்த முடியும். சிகிச்சை முடிந்து 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும்.

அன்றிரவே சாதாரண வேலைகளைச் செய்யலாம். ஓய்வோ, கடுமையான கட்டுப்பாடுகளோ தேவையிருக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சவ்வுப் பிதுக்கம் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையிலிருந்து தப்பிக்க இது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்..