நாளை பாரிய மாற்றங்களுடன் களமிறங்குமா இந்திய அணி?

430

India

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ஓட்டங்களால் படுதோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் முதல் மூன்று நாட்கள் ஆதிக்கம் செலுத்தியும் இந்திய அணி தோற்றது இரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது.
176 ஓட்டங்கள் என்ற இலக்கை எடுக்க முடியாமல் இலங்கையிடம் இந்தியா வீழ்ந்தது.

மேலும் முதல் டெஸ்டில் சதம் அடித்த ஷிகார் தவான் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு பாதிப்பே. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

நாளைய டெஸ்டில் ராகுலுடன் தொடக்க வீரராக முரளி விஜய் ஆடுவார். அவர் முழு உடல் தகுதி பெற்றுவிட்டாரா என்பது தெரியவில்லை. 5 பந்து வீச்சாளர்கள் திட்டம் முதல் டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் 2வது டெஸ்டில் 4 பந்து வீச்சாளர்கள், 7 துடுப்பாட்ட வீரர்களும் களம் இறங்குவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் துடுப்பாட்ட வீரர்கள் என்ற முறையில் களம் இறங்கினால் தான் புஜாராவும், ரோகித் சர்மாவும் இடம்பெறுவார்கள். ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதேபோல ஹர்பஜன்சிங்கின் பந்துவீச்சும் காலி டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் நாளைய டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட அணியில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

துடுப்பாட்டத்தில் வீராட் கோலி, ரகானே ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கைக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

இதேவேளை இலங்கை அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார இந்த டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதால் அவருக்கு வெற்றிக் களிப்புடன் விடை கொடுக்கும் எதிர்பார்ப்பு இலங்கைக்கு உள்ளது.