மெழுகு பூசப்பட்ட அப்பிள் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் கல்முனை வடக்கு சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.கணேஷ்வரன் தெரிவிக்கையில் கல்முனைப்பிரதேசத்தில் செயற்கை முறையில் (இரசாயனம் கலந்து) பழங்களை கனிய வைக்க வேண்டாம் என பழவியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி பழங்களுக்கு இரசாயனம் தெளித்து கனியவைத்தால் சட்ட நடவடிக்கைக்குட் படுத்தப்பட்டு வருகின்றனர்.
தற்போது கல்முனைப் பிரதேசத்தில் மெழுகு பூசப்பட்ட அப்பிள் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நுகர்வோரிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுவருகின்றன.
இதனையடுத்து பழக்கடைகளைப் பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் மூலம் பரிசோதனைக்குட்படுத்தி வருகின்றோம். இவ்வாறானவர்களுக்கு 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.





