ஜெயலலிதா – மோடி பற்றி அவதூறு: இளங்கோவனுக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

480

311243050Untitled-1சமீபத்தில் சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி, போயஸ் தோட்டத்துக்குச் சென்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்து, மக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன் நிலையை விளக்கி சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகை யாளர்களுக்கு இளங்கோவன் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’முதல்வரையோ, பிரதமரையோ அவமதிக்கும் எண்ணம் இல்லை. பிரதமர் – முதல்வர் சந்திப்பு குறித்து நான் தெரிவித்த கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

நான் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. அதனால், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என் மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கைச் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது எந்த வழக்கும் இல்லை.

காங்கிரஸார் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போட்டு கைது செய்து வருகிறது. அது கண்டிக்கத்தக்கது. கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்’’ என்று இளங்கோவன் தெரிவித்தார்.

பேட்டியின் நடுவே, ஒரு நிருபர் இளங்கோவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர் பேசியது தவறு என்றார். இளங்கோவன் இல்லை என்றார். என்னிடம் ஆடியோ ஆதாரம் இருக்கிறது என்றார் நிருபர். அப்படியானால், அதை இங்கே, அந்த ஆடியோவை ஒலிக்கவிடு என்றார் இளங்கோவன்.

’’முதல்வரால் வாய்பேச முடியவில்லை. அப்படி என்றால் 50 நிமிடங்கள் முதல்வரும் பிரதமரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள். இதை தவறாக புரிந்துகொள்ளக் கூடாது’’ என்று ஆடியோவில் இளங்கோவன் பேச்சு ஒலித்தது.

ஆடியோ ஒலித்து முடிந்ததும், மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. கொச்சைப்படுத்தி பேசியுள்ளார் என்று இளங்கோவனை பார்த்து சொன்னார் நிருபர். தவறாக புரிந்துகொள்ளக்கூடாது என்று சொல்லியிருக்கிறேனே அதை கவனித்தாயா என்று கோபப்பட்டார் இளங்கோவன்.

‘உங்க மனைவியைப் பற்றியோ, உங்க பெண்னைப் பற்றியோ, அக்கா, தங்கையைப் பற்றியோ இப்படி பேசிவிட்டு தவறாக நினைத்துக்கொள்ளக் கூடாது என்று சொல்லலாமா? என்று கேட்டார் அந்த நிருபர்.

இதைக்கேட்டதும் ஆவேசம் அடைந்த இளங்கோவன், ‘’ஏன் உன் பெண்டாட்டியப் பற்றி சொல்லு. என் மனைவியைப் பற்றியோ என் வீட்டுப் பெண்களைப் பற்றியோ யாரும் பேச உரிமை கிடையாது’’ என்று ஆவேசமானார். இதனால் சலசலப்பு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதேவேளை பாரதீய ஜனதா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டு பேசியதாவது:–

பிரதமர் மோடியும் தமிழக முதல்–அமைச்சரும் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்காக சந்தித்தனர். ஆனால் அதை வக்கிரபுத்தியுடன் இளங்கோவன் கொச்சைப்படுத்தி பேசியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

இளங்கோவன் நல்ல மனநிலையில் இருக்கிறாரா? என்ற சந்தேகம் எழுகிறது. அவர் அரசியல் நடத்த, கட்சி நடத்த உண்மையான மனநிலை உள்ளவரா என்பதை டாக்டரை சந்தித்து மருத்துவ அறிக்கை பெற வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பெண் தான். இப்படிப்பட்ட தலைவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இது தொடர்பாக சோனியா காந்திக்கு கடிதம் எழுத உள்ளேன்.

நடிகை குஷ்புவின் ஆதரவும் பக்க பலமும் இருப்பதால் இளங்கோவன் இப்படி நாகரீகமற்று பேசுகிறாரா?

அவதூறாக பேசிய இளங்கோவனை வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் சந்தித்து வருகின்றனர். அவர் என்ன தியாகியா? காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது இலங்கை தமிழர்களை கொன்று குவித்தார்களே அப்போது இந்த தலைவர்கள் ஏன் மவுனமாக இருந்தார்கள்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆளும் கட்சியினர் அநாகரீகமாக நடந்து கொள்வதாக கூறுகிறார். தி.மு.க. ஆட்சி காலத்தில் கமலாலயம் தாக்கப்பட்டது நாகரீகமா?

அவதூறு பேச்சுக்கு இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்கள் சார்பாக இளங்கோவன் மீது வழக்கு தொடரப்படும், எனக் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டத்தின் போது இளங்கோவன் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.