தென்கொரியாவில் வாழும் இலங்கையர் அஞ்சத் தேவையில்லை : தூதரகம் அறிக்கை!!

531

South-Korean-soldiers

வட-தென் கொரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற சூழ்நிலையால் எழுந்துள்ள அச்சமான சூழல் குறித்து இலங்கையர் அஞ்சத் தேவையில்லை என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக தென் கொரியாவில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ள இலங்கையர் மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினரும் கடந்த சில நாட்களாக அச்ச உணர்வுக்குள்ளாகியிருந்தனர்.

இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 22ம் திகதியிட்டு விடுத்துள்ள அறிக்கையொன்றின் மூலமாக தென்கொரியாவில் உள்ள இலங்கையரோ, அவர்களின் உறவினர்களோ அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று வலியுறுத்தியுள்ளது.

வட- தென் கொரிய நாடுகளின் எல்லைப்புறத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை இலங்கைத் தூதரகம் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், தற்போதைக்கு இலங்கையிலிருந்து தென் கொரியா சென்றுள்ளவர்களுக்கு எதுவித ஆபத்தும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே எல்லைப் பகுதியை அண்மித்த பகுதிகளில் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளவர்கள் தங்களது வேலைகளை விட்டு தப்பியோடவோ, இலங்கைக்குத் திரும்பிச் செல்வதற்கோ முயற்சிக்க வேண்டியதில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும் உக்கிரமான போர்ச் சூழல் ஏற்படும் பட்சத்தில் இலங்கையரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தூதரகம் மேற்கொள்ளும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Korea