தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடந்த ஒரு நாள் தொடரை தென்னாபிரிக்கா 2–1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
இத் தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 283 ஓட்டங்களைப் பெற்றது. இதில் டிவிலியர்ஸ் 64 ஓட்டங்களை (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினார்.
இதன்மூலம் டிவிலியர்ஸ் புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 190 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 182 இன்னிங்ஸ்களில் களம் இறங்கியிருக்கும் டிவிலியர்ஸ் 8,045 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 8 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு இந்திய முன்னாள் தலைவர் கங்குலி 2002-ஆம் ஆண்டில் தனது 200-ஆவது இன்னிங்ஸில் இந்த இலக்கை கடந்ததே சாதனையாக இருந்தது. அதனை டிவிலியர்ஸ் முறியடித்தார்.





