சர்வதேச விசாரணை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் : அகில விராஜ் காரியவசம்!!

712

DM_20150717_A001-4

சர்வதேச விசாரணை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையின் பிரகாரம் எம்மால் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. அதற்கு மாறாக பலமான உள்ளக விசாரணை பொறிமுறையை கொண்டு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கின்ற அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. உள்ளக விசாரணை பொறிமுறைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

விடுதலை புலிகளுக்கு எதிரான இறுதி யுத்த கட்டத்தின் போது மனித உரிமை மீறல் இடம்பெற்றதாக சர்வதேச ரீதியாக பாரிய குற்றச்சாட்டுகள் எழுப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் சர்வதேச விசாரணையை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்திற்கு அனுமதி வழங்கினார்.

இருந்தபோதிலும் இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையிலோ் நீதியான முறையிலோ உள்ளக விசாரணை பொறிமுறை கட்டமைக்கப்படவி்ல்லை.

பலமான உள்ளக விசாரணைக்கு வழிவகுப்போம் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிற்கும் சர்வதேச நாடுகளுக்கும் வாக்குறுதி அளித்தார். இருந்தபோதிலும் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாகவோ தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலோ எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் முன்னைய அரசாங்கம் முன்னெடுக்க தவறியதன் காரணமாகவே இலங்கை சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுப்பதற்கு பிரதான காரணமாகும்.

இந்நிலையில் முன்னைய அரசாங்கத்தின் தவறுகளை முழுமையாக இல்லாமல் செய்து தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் உள்ளக பொறிமுறையொன்றை ஆரம்பிக்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் அநீதி ஏற்படாது. தமிழ் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான முறையில் உள்ளக விசாரணையை ஆரம்பிப்போம். மைத்திரி -ரணில் அரசாங்கத்தின் மீது சர்வதேசத்திற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன்பிரகாரம் எதிர்வரும் மாதம் கூடவுள்ள ஜெனிவா கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு ஆதரவாக பிரேரணையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளது.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வதேச விசாரணையே வேண்டும் என்று அடம்பிடிப்பதில் பயனில்லை. பலமான உள்ளக விசாரணையை கொண்டு அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு காணமுடியும். சர்வதேச விசாரணையொன்று இலங்கைக்கு தேவைப்படாது. உள்ளக விசாரணையே போதுமானது. ஆகவே உள்ளக விசாரணை பொறிமுறைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.