எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நியமிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியன இணங்கியுள்ளதாக தெரியவருகின்றது.
17ஆம் திகதி இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வடகிழக்கில் தனித்துப் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 16ஆசனங்களை பெற்று மூன்றாவது பெரும்பான்மை ஆசனங்களை பெற்ற தரப்பாக உருவெடுத்திருந்தது.
அவ்வாறிருக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு தேசிய அரசாங்கமே முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவித்ததுடன் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வௌிவந்தமிருந்தன. குறிப்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தரப்பினர் மகிந்த ராஜபக்ஷவுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டுமென அழுத்தமளித்துவந்தன. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அப்பதவி தனக்கு வேண்டாடிமென நிராகரித்திருந்தார்.
அதேநேரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்ணி, ஜாதிக ஹெல உறுமய, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல்வேறு தரப்புக்களும் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் பதவி யாருக்கு என்பதை தீர்மனிக்கும் பொறுப்பை எதிர்க்கட்சிகளிடமேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைளித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்வீரவன்ஸ தெரிவித்திருந்தார்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் பல்வேறு இழுபறிகள் தொடர்ந்த நிலையில் எட்டாவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விசேட உரையினையடுத்து உரையாற்றிய சபாநாயகர் கரு ஜயசூரிய வியாழக்கிழமை சபைஅமர்வு இடம்பெறும்போது எதிர்க்கட்சித் தலைவரின் பெயர் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படுமென அறிவித்தார்.
அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தின் நேற்றை கன்னி அமர்வு நடவடிக்கைகளுக்கு முன்னரும் பின்னருமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உட்பட பல்வேறு அரசியல் தரப்புக்களுக்கிடையிலான பிரத்தியேக சந்திப்புக்களின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு வழங்குவதற்கு ஏகமனதாக இணங்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படாதவிடத்து தனது பதவியை இராஜினாமச் செய்யவுள்ளதாக பாராளுமன்றக் குழுக்களின் பிரதிதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரெலோ தலைவரும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





