சட்டவிரோதமான முறையில் போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், கீறீஸ், இத்தாலி மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளுக்கு குறித்த நபர்கள் செல்வதற்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் 02 பேர் போலி கடவுசீட்டினூடாக பிரான்ஸ நோக்கி பயணிக்க முயற்சித்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிளிநொச்சி மந்தாரபுரம் மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போலி கடவுசீட்டினூடாக கீறீஸ் நோக்கி பயணிக்க முயற்சித்த மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியூடாக போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி இத்தாலி நோக்கி பயணிக்க முயற்சித்த மன்னார் பகுதியை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே போலி கடவுச் சீட்டினூடாக ஜேர்மனுக்கு பயணிக்க முயற்சித்த முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரும் நாடு கடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் போலி கடவுச் சீட்டினூடாக பிரித்தானியாவிற்கு செல்ல முயற்சித்த வெளிநாட்டவர் ஒருவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிரிய நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 5 இலங்கையர்கள் மற்றும் குறித்த வெளிநாட்டு பிரஜையையும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.