எம்மை அசைக்க யாராலும் முடியாது! தேசிய அரசு பலமடைந்து விட்டது- ஜனாதிபதி

481
be0a02c3929d386bbfee80169a2d1548_XL
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பலர் எதிர்பார்த்துள்ளபோதும், இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி உரையாற்றுகையிலே,
‘ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தன. இதற்கமைய நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிப்பதோடு, அதற்கு நான் தலைவணங்குகின்றேன்.ஆனால் எம்மை நோக்கி கல்வீச்சு தாக்குதல்களும் விமர்சனங்களும் இடம்பெறுகின்றன.
நானும் பிரதமரும் அரசியல் அனுபவமற்றவர்கள் என்றும், சர்வதேசத்திற்கு அடிபணிந்து ஏகாதிபத்தியவாதியாக உள்ளதாகவும், தேசப்பற்றுள்ள அரசாங்கத்தை வீழ்த்தியுள்ளதாகவும் கூறுகின்றனர்.
நாம் யாருக்கும் அடிபணியவில்லை என்பதற்கு, பதில் கூற வேண்டிய அவசியமில்லை. காரணம், எமது செயற்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்பன, நாம் தேசத்தை காட்டிக்கொடுத்தோமா, சர்வதேசத்திடம் அடிபணிந்துள்ளோமா என்பதை புரியவைக்கும்.சர்வதேசத்திற்கு அடிபணிய வேண்டிய தேவை எமக்கில்லை. அதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை என்பதையும் உங்களுக்கு தெளிவாக கூறுகின்றேன்.
ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட எமது கலாசாரத்தில், நாம் ஒரு கறுப்புப் புள்ளியை ஏற்படுத்த மாட்டோம்.சிலர் இந்த அரசாங்கத்தை இன்னும் 1 அல்லது இரண்டு வருடங்களில் கவிழ்த்துவிட்டு புதிய அரசாங்கத்தை உருவாக்கலாம் என மனப்பால் குடித்துக்கொண்டிருக்கிறார்கள். கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்.ஆனால் எவராலும் இன்னும் 5 வருடங்களுக்கு எம்மை அசைக்க முடியாது. ஆகவே அரசாங்கத்தை கவிழ்த்து விடலாம் என  ஏகாதிபத்தியவாதியாகவும் கனவு காண்பவர்கள் அதனை மறந்துவிட வேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை பெறுவது குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 10 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சிசெய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சாதாரண நாடாளுன்ற உறுப்பினராக நாடாளுமன்றில் பிரவேசித்துள்ள நிலையில். எமது அமைச்சர்கள் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்புகளை ஏற்பது பிழையா என நான் கேட்கின்றேன்.
எனவே இவ்வாறான பலத்த சவால்கள் நிறைந்ந எமது பயணத்தில், அனைவரும் கைகோர்த்து எமது இலக்குகளை எட்டுவதற்கு உதவ வேண்டும்.அத்துடன், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அர்ப்பணிப்புடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்படுமாற கேட்டுக்கொள்வதோடு, உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்தார்.