
படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை மேலும் ஒரு தடயப் பொருளாக சட்ட வைத்திய அதிகாரி, நீதிமன்றதில் இன்று சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய இந்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, ஜின்டெக் நிறுவனத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பீட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திறக்கு நீதவான் எஸ்.லெனின் குமார் இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணனி கைத்தொலைபேசி மற்றும் டெப் (TAB) ஆகியவற்றில், குற்றச்செயல் தொடர்பான காட்சிகள் அல்லது புகைப்படங்கள் இருந்தனவா என்பதை கண்டுபிடிக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணையை இம்மாதம் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் அதுவரை 9 சந்தேகநபர்களையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.





