வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுத்திகரிப்பு ஒப்பந்த ஊழியர்கள் இன்று(16.09.2015) காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது..
கடந்த 2002 ஆம் ஆண்டு யுத்தகாலப் பகுதியிலிருந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சுத்திகரிப்பு ஒப்பந்த ஊழியர்களாக கடமையாற்றிவரும் 54 ஊழியர்களே தற்போது ஒப்பந்தம் கைமாறியதையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இதில் 20 சுத்திகரிப்பு ஊழியர்களை மட்டுமே புதிய ஒப்பந்தக்காரர்களால் உள்வாங்கப்பட்டுள்ளனர். மிகுதி 34 ஊழியர்கள் கடந்த 13 வருடங்களாக வேலை செய்துவரும் தமக்கு வவுனியா பொது வைத்திய சாலையில் சுத்திகரிப்பு தொழிலினை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் என்று கோரியே இக் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இன்று காலை புதிய ஒப்பந்தக்காரகள் தமது வேலையினை ஆரம்பித்தபோதும் உள்வாங்கப்பட்ட 20 சுத்திகரிப்பு ஊழியர்களும் பணிக்குச் செல்லவில்லை. தம்முடன் கடந்த காலங்களில் பணியாற்றிய ஊழியர்களையும் பணியில் இணைத்துக் கொள்ளும் வரை தாங்களும் இப் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.






