
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் நாளைய தினம் மீள நல்லடக்கம் செய்யப்படவுள்ளது..
வஸீம் தாஜுதீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸிடம் நேற்று முன்தினம் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையிலேயே நாளை வெள்ளிக்கிழமை ஜனஸா மீள நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தஜுதீனின் சடலம் மீதான விசாரணைகள் நிறைவுபெற்றுவிட்டதாகவும் அதனால் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறும் புலனாய்வுப் பிரிவினர் நீதிவானிடம் நேற்று முன்தினம் கோரினர். இதனையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 2015 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மேலதிக சட்ட வைத்திய தேவைகளுக்காக தோண்டியெடுக்கப்பட்ட வஸீம் தாஜுதீனின் ஜனாஸாவை 2015 செப்ெடம்பர் மாதம் 18 ஆம் திகதி நல்லடக்கம் செய்வதற்காக வஸீமின் சகோதரியான ஆயிஷா தாஜுதீனிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் வஸீமின் ஜனாஸாவை மீள அடக்கம் செய்யும் போது தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தெஹிவளை ஜும் ஆப் பள்ளிவாசலின் நிர்வாக சபை தலைவருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி நீதிவானின் உத்தரவுக்கு அமைய கல்கிஸை மேலதிக நீதிவான் முன்னிலையில் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் உள்ளிட்ட குழுவினரால் இவரது ஜனாஸா தோண்டி எடுக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த சட்ட வைத்திய அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள எலும்பு மாதிரிகளை மூலக்கூறுகள் தொடர்பான சோதனைகளுக்காக புலனாய்வுப் பிரிவின் மனிதப் படுகொலைகள் பிரிவின் சார்ஜன்ட ரத்னபிரிய ஊடாக ஜீன்டெக் நிறுவனத்துக்கு ஒப்படைக்குமாறும் நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளமையும் சுட்டிக் காட்டத்தக்கது.





