மீன் சாப்பிட்டால் மனஅழுத்தில் இருந்து விடுபடலாம்!!

755

fishஅதிக அளவு மீன் சாப்பிடுவதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

சுமார் ஒன்றரை இலட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 26 வெவ்வேறு ஆய்வுகளின் முடிவுகளை ஒப்பிட்டு ஆராய்ந்ததில் அதிக அளவு மீன் சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்த நோய் தோன்றுவதற்கான வாய்ப்பு 17 சதவீதம் குறைவதாக தெரியவந்திருக்கிறது.

மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

ஒருவர் உண்ணும் உணவுக்கும் அவரது மனநிலைக்கும் இடையில் உறவு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக செய்யப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளை ஆராய்ந்ததில்,

முடிவில் அதிகமாக மீன் உண்பதற்கும், மனிதர்களின் மன அழுத்த நோய்க்கும் இடையில் கணிசமானத் தொடர்பு இருப்பதையும், அது ஆண் மற்றும் பெண் என இரு தரப்பாருக்கும் பொருந்துவதாகவும் கண்டறிந்தனர்.

ஆரோக்கிய உணவாக மீன் மூளையில் இருக்கும் சமிக்ஞைகளுக்கான 2 முக்கிய வேதிமங்களான டோபோமைன் மற்றும் செரொடோனின் ஆகியவை மனிதர்களின் மன அழுத்த நோயோடு தொடர்புடையவை.

இந்த 2 மனித மூளை வேதிமங்களின் செயல்களை கட்டுப்படுத்துவதில் மீன்களில் இருக்கும் ஒமெகா 3 என்கிற கொழுப்பு அமிலம் முக்கிய பங்காற்றுவதால் அதிகமாக மீன் உணவு சாப்பிடுவது மன அழுத்த நோய் வராமல் தடுக்கிறது என்று ஆய்வாளர்கள் விளக்கமளித்திருக்கிறார்கள்.

மன அழுத்த நோயை தடுப்பதற்கான முதல்கட்டத்தில் அதிகமான மீன் உணவு உட்கொள்வது நல்ல பலன் தரும் என்கிறார் கிங்டாவ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் டாங் பஃபெங் ஜாங்.

அதேசமயம், உணவில் மீன்களின் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை சேர்த்துக்கொள்வது என்கிற மிக எளிய, சிறிய, நடைமுறை சாத்தியமான பழக்கத்தின் மூலம் மனிதர்கள் தங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

மீன்களை சாப்பிட விரும்பாத மரக்கறி உணவாளர்கள், மீன்களில் இருக்கும் நல்லவிதமான கொழுப்பு அமிலத்தின் பலன்களை அடையவேண்டுமானால், ஏராளமான விதைகள் மற்றும் கொட்டைகளை சாப்பிடவேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.