கொட்டதெனியாவ – படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துணியினாலான பட்டி ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று பேர் விசேட பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்துள்ள சாட்சியங்களின் படி குறித்த மூவரிடம் நேற்றுமுன்தினம் மாலை முதல் விசாரணைகளை செய்து வருவதாக விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்படுவோரில் சிறுமி சேயா செதவ்மியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த 18 வயதுடைய இளைஞன் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள 35 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையும் நடுத்தர வயதுடைய பிறிதொருவரும் அடங்குவதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் கொட்டதெனியாவ – படல்கம, அக்கரங்கஹ பகுதிக்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்கள் மேலதிகமாக சில சான்றுகளையும் சேகரித்துள்ளது. இந் நிலையில் 6 பொலிஸ் குழுக்கள் சேர்ந்து குறித்த சிறுமியின் கொடூர கொலை தொடர்பிலான விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
விசாரணைகளை மேற்கொள்ளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவரின் தகவல்படி, சிறுமியின் படுகொலை தொடர்பிலான சந்தேகநபர் போதைக்கு அடிமையாகியவராக இருக்க வேண்டும் என்ற உறுதியான தகவல் ஒன்றின் அடிப்படையில் பிரதான விசாரணை இடம்பெற்று வருகின்றது. அத்துடன் தற்போது பொலிஸாரால் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருபவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் எனவும், நீலப்படங்கள் பார்ப்பதற்கும் அவர்கள் அடிமையாகி இருந்ததாக உளவுத் தகவல்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விகாரமான பாலியல் ஆசைகள், நடவடிக்கைகள் குறித்தும் இந்தச் சந்தேகநபர்கள் தொடர்பில் கிடைத்த தகவல்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டார். நேற்று மாலை வரை இந்த விவகாரம் குறித்து எவரும் கைது செய்யப்பட்டிருக்கவில்லை என பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியந்த ஜயக்கொடி தெரிவித்தார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் அவர் எவ்வித தகவல்களையும் தெரிவிக்க விரும்பாத போதும் புலனாய்வுப் பிரிவினரும் அந் நபர்களை விசாரணை செய்து வருவதாக அறிய முடிகின்றது. அதில் ஒருவர் சிறுமியை தேடுவதில் தீவிரமாக செயற்பட்டவர் எனவும் இறுதிக் கிரியைகளின் போது அவர் அங்கு இருக்கவில்லை எனவும் குறிப்பிடும் பொலிஸார், அந் நடவடிக்கைகளும் அவதானத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இதனிடையே நேற்று சிறுமி சேயா செதவ்மியின் 7 ஆவது நாள் அமயக் கிரியைகள் இடம்பெற்றன. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிறுமியின் தந்தை உபுல் நிஸாந்த,
தனது ஊரில் தன்னுடன் ஒன்றாக இருந்த ஒருவர் தனது மகளை இவ்வாறு கொடூரமாக கொலை செய்திருக்க வேண்டும் என தான் சந்தேகிப்பதாக தெரிவித்தார். அத்துடன் இந்த கொடூரத்துடன் ஒருவர் மட்டுமல்லாது பலர் தொடர்புபட்டிருக்க வேண்டும் எனவும் தற்போது பொலிஸ் பொறுப்பில் உள்ளவர்கள் தொடர்பில் தமக்கும் தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர்களுக்கும் பிள்ளைகள் உள்ளதால் அவர்கள் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்துவது பொருத்தமற்றது எனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் நேரடி கட்டுப்பாட்டில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, மேல் மாகாணத்தின் வடக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் எல்.ஜி.குலரத்ன ஆகியோரின் கட்டுப்பாட்டில் நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அபேவிக்ரமவின் ஆலோசனைக்கு அமைய மூன்று பொலிஸ் குழுக்களும் பிரதான விசாரணையினை பொலிஸ் மா அதிபரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய 3 சிறப்புக் குழுக்களும் முன்னெடுத்துள்ளன.





