நாம் குழந்தைகள் மீது கொள்ளும் அதீத அக்கறை எப்போது பாதகமாகிறது?

275


Baby

இது பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாளாய் என் மனதில் இருந்தது. போதிய புரிதலின்றிப் பரிதவிப்பு மன நிலையுடன், முறையற்ற ஆலோசனைகளால் வழி நடாத்தப்படும் எத்தனையோ பெற்றோரின் குழந்தைகள் நோய் தீவிரமான நிலையில் அனுமதிக்கப்பட்டதைப் பார்த்துக் கோவப்பட்டும் இருக்கிறேன்.இன்றைக்கும் எமதூரிலே யாரும் நோய் வாய்ப்படும்போது பலரின் ஆலோசனையாகக் காதில் விழும் வார்த்தை “உடனே கொழும்புக்கு கொண்டு செல்லுங்கள் என்பதே..”
அந்தப்பையனுக்கு பதின்மூன்று வயது, தலசீமியா என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவன். அதற்குரிய சிகிச்சை மற்றும் குருதி மாற்றல்களை அவனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் பெற்று வருபவன்.

கடந்த சில நாட்களாக அவனைப் பீடித்திருந்த காய்ச்சலுக்கு தனியார் சிகிச்சை நிலையத்தில் ஒரு முறை மருந்து எடுத்து இருக்கிறார்கள். காய்ச்சல் தணியாமல் அவன் மேலும் சோர்ந்து போகவே அடுத்த நாள் வேறோர் வைத்தியரிடம் தனியார் சிகிச்சை நிலையத்தில் மருந்து எடுத்து இருக்கிறார்கள். ஓரிரு நாட்களில் காய்ச்சல் தணியாததால், என்ன செய்வது என்ற யோசனையில் இருப்பவர்களுக்கு எந்தவித மருத்துவப் பின்புலமும் அற்ற உறவினர் ஒருவரின் ஆலோசனை இலவசமாகக் கிடைக்கிறது.“கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்குப் போங்கள், அதுதான் இலங்கையில் சிறந்த இடம், போறதோட தலசீமியா வருத்தத்தையும் காட்டிக்கொண்டு வரலாம்தானே”. இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு வாடகைக்கு அமர்த்திய வாகனமொன்றில் எட்டு மணித்தியாலங்கள் தாண்டிய பயணத்திற்குப் பின்னர் லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையை அடைந்தனர்.முகப்பிலேயே சிறுவனது உடல்நிலை கவலைகிடம் என்பதை உணர்ந்துகொண்டு நான் பணிபுரியும் ஆரம்ப மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அனுமதிக்கப் பட்ட சில நிமிடங்களுக்குள்ளாகவே சிறுவன் இதயம் செயலிழந்தது (Cardiac Arrest). நீண்ட நேர முயற்சியின் பின்னரும் அவனது உயிரைக்காப்பாற்ற இயலவில்லை.


இது எமக்கு முதலாவது முறை அல்ல, மூளை விருத்திக் குறைபாடுள்ள பத்து வயதுப் பையன் ஒருவனை ஒருவாரமாக பீடித்திருந்த இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் காரணமாக காரில் கொழும்பு அழைத்து வந்து மூன்று மணித்தியாலங்களுக்குள் அவன் இறந்து போனான்.

எல்லாவற்றையும் விட பத்து மாத வயதான குழந்தை ஒன்று நியூமோனியா என்று கண்டறியப்பட்டு பொலநறுவை வைத்தியசாலையில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், தமது சுய விருப்பில் பலவந்தமாக வெளியேற்றி பஸ்ஸில் கொழும்பு அழைத்து வந்து, ஒருவாரம் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்து உயிரிழந்தது.


இந்த அநியாய இழப்புக்கள் எதனால்,
1. குறித்த நோய்க்கு ஒருவைத்தியரை அணுகி, உடல்நிலை சீராகா விட்டால், மீளவும் அதே வைத்தியரிடம் செல்லும்போது ஏற்கனவே பார்த்த அனுபவத்திலும் கொடுத்த மருந்துகள் அடிப்படியிலும் ஏதேனும் தீவிர நோய்கள் இருப்பினும் அவற்றை விரைவாக இனம்காண உதவும்.

2. அப்படி முதலாவது வைத்தியர் தொடர்பாக திருப்தி இல்லா நிலை காணப்பட்டால், அருகிலே உள்ள அரச வைத்தியசாலையில் காண்பிப்பது சிறந்தது. (பொதுவாக தனியார் வைத்தியசாலைகளை விட அரச வைத்தியசாலைகளில் வளங்கள் அதிகமாக உள்ளதுடன், ஒன்றுக்கு மேற்பட்ட வைத்தியர்களின் அவதானிப்பும் இருக்கும்)

3. என்ன நோய் என்று அறியப்படாத நிலையில் நோயாளியின் உடல் நிலையை அறியாது நெடுந்தூரம் பயணிப்பது ஆபத்தானது. செல்லும் வழியில் நோய் தீவிரமடைந்தால் உயிர்காக்கும் திறனுள்ளோர் யாரும் அருகில் இல்லாமல் போகலாம்.

4. எப்படி இருப்பினும் தூரம் பயணிக்க வேண்டும் என்று நினைப்போர் பயணிக்க முன்னர் பயணம் செய்ய ஏதுவான நிலையில் குழந்தை உள்ளதா என வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளல் அவசியம். அல்லது அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குழந்தையை மாற்றம் செய்யவேண்டும் என கருதும் பட்சத்தில் உயிர்காக்கும் வசதிகளோடு, வைத்த்தியர், தாதி ஆகியோரின் மேற்பார்வையுடன் மாற்றம் செய்யப்படலாம்.


எனது கருத்து எப்போதும் அருகிலுள்ள அரச வைத்தியசாலையைப் பயன்படுத்துங்கள். குழப்பங்கள் நேரும்போது முடிவெடுக்க முன்னர் உங்களுக்கு நம்பிக்கையான வைத்தியர் ஒருவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

– செ.மதுரகன்-