
வவுனியா செட்டிகுளம் அடப்பன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் (17.09.2015) மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப்பெண் சிகிச்சை பலனின்றி நேற்று (18.9.2015) உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
சம்பவதினம் காலை 7மணியளவில் வீட்டிற்குப் பின்புறமாக இருக்கும் வேலியில் வேப்பமரத்தில் கிளை பறிப்பதற்குச் சென்ற போது வேப்பமரத்திலிருந்த மின்சாரக் கம்பியை பிடித்துள்ளார். அதிலிருந்தது மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கந்தசாமி ராஜேஸ்வரி என்ற 55 வயதுடைய குடும்பப் பெண்னே நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரின் வீட்டிற்கு அருகில் இராணுவமுகாம் அமைந்துள்ளது. பாதுகாப்புக்கு பொருத்தப்பட்ட மின் குமிழ் கம்பியிலிருந்தே மின்சாரம் சென்றுள்ளது. இராணுவத்தினர் மின்குமிழினை நிறுத்த தாமதம் ஏற்பட்டதாலே தவறுதலாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
உயிரிழந்தவரின் உடலை பார்வையிட்ட நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன் 29ஆம் திகதி விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது. மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





