இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையை வரவேற்பதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார்.
சர்வதேச நாடுகளின் நம்பிக்கையின் பிரகாரம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மூவின மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசானது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.கொழும்பில் அமைந்துள்ள நவசமசமாஜக் கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய விசேட கலப்பு நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையை நாம் வரவேற்கின்றோம்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் ஆட்சியை முன்னெடுத்த பாசிச குழுவினரினது சில மோசமான செயற்பாடுகளின் மத்தியிலேயே யுத்தத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் இன்று யுத்த காலப்பகுதியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற விடயங்கள் தொடர்பில் முன்னைய ஆட்சியின் அரசியல் பிரமுகர்களே பொறுப்புக்கூறவேண்டும்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி சர்வாதிகார ஆட்சிக்கும் பாசிசவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று புள்ளி வைக்கும் நோக்குடனேயே மூவின மக்களும் ஒன்றிணைந்து நாட்டில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தினர்.அந்தவகையில் மீண்டும் முன்னாள் ஜனாதிபதியின் ஆதரவு தரப்பினர் சர்வாதிகார ஆட்சியை மீண்டும் தொடர செயற்பாடுகளை முன்னெடுத்த வேளை மீண்டும் மக்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
இன்றைய தேசிய அரசாங்கத்தின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் யுத்த காலப்பகுதியில் அப்பாவி மக்களை காப்பாற்றும் நோக்குடன் விடுதலை புலிகளுடன் போர் நிறுத்தம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று கைசாத்திட முயற்சித்த செயற் பாடுகளும் அன்றைய காலக்கட்டத்தில் தோல்வி கண்டது.
அந்தவகையில் இன்றைய அரசானது மக்களின் நம்பிக்கையின் பிரகாரம் நாட்டில் ஜனநாயகத்தையும் சட்டத்தையும் உரியமுறையில் நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.கடந்த காலங்களில் நாட்டில் சட்டம் மற்றும் நீதித்துறை என்பன சர்வாதிகார சக்திகளிடம் அடி பணிந்து காணப்பட்டது. அந்தவகையிலேயே இன்று இலங்கை இவ்வாறான நிலைமை ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது.
எனவே புதிய அரசானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.





