
உலகின் ‘மின்னல் வேக மனிதரான’ ஜமைக்காவின் உசைன் போல்ட், தான் படித்த பாடசாலைக்கு இலங்கை மதிப்பில் 17 கோடி ரூபா மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கியுள்ளார்.
உசைன் போல்ட் ஜமைக்காவில் உள்ள ட்ரெலானி என்ற சிறிய நகரத்தில் பிறந்தவராவார். அங்குள்ள வில்லியம் க்நிப் ஞாபகார்த்த உயர் பாடசாலையில் படித்த போதுதான் சிறந்த தடகள வீரராக உருவாக ஆரம்பித்தார்.
இந்நிலையில் தான் படித்த இந்த பாடசாலைக்கு சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான கிரிக்கெட் மட்டை, பந்துகள், கையுறைகள் உள்ளிட்ட கிரிக்கெட் உபகரணங்கள், கால்பந்தாட்ட பந்துகள், காலணிகள், தடகள வீரர்களுக்கான உபகரணங்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கியிருந்தார்.
மேலும், அறக்கட்டளை மூலமாகவும் தான் பிறந்த மண்ணுக்கு பல உதவிகளை செய்தும் வருகிறார்.
உசைன் போல்ட், அண்மையில் சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்ற உலகத் தடகளப் போட்டியில் 100மீற்றர், 200மீற்றர் ஓட்டப் பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.





