சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவேண்டும் என நினைப்பது மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்றும் நோக்கத்தில் அல்ல. எமது இராணுவத்தையும் நாட்டையும் காப்பாற்றவே உள்ளக பொறிமுறைகளை கோருகின்றோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஆட்சி மாற்றமே நாட்டை காப்பாற்றியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லிணக்கத்துக்கான தேசிய முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் உண்மைத் தன்மைகளை கண்டறிய வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கைகளின் மூலம் நாட்டை மீண்டும் பழைய ஆயுதக் கலாசாரத்துக் கொண்டு செல்வதை நாம் அனுமதிக்க மாட்டோம். யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சூழலொன்று உருவாகினாலும் நாட்டில் மூவின மக்களின் மனங்களையும் வென்றெடுக்க முடியாமல் போய்விட்டது.
அதேபோல் சர்வதேசத்தை யும் தக்கவைக்க முடியாமல் போய்விட்டது. இதற்க்கு எமது உள்ளக செயற்பாடுகளும் எமது வெளிநாட்டுக் கொள்கையுமே காரணமாகும். சர்வதேச சவால்களை சமாளிக்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நபர்களும் எமது வெளிநாட்டுக் கொள்கையும் முழுமையாக பக்கச்சார்பான, நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளாகவே அமைந்தது. வெளிவிவகார அமைச்சர் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் அடிமையாக செயற்பட்டார்.
அதேபோல் எமது நாட்டை சீரழிக்கும் வகையிலேயே மஹிந்தவின் வெளிநாட்டுக் கொள்கையும் அமைந்தது. கடந்த அரசாங்கத்திலும் நாம் அங்கம் வகித்திருந்தோம் அதேபோல் இந்த அரசாங்கத்திலும் நாம் அங்கத்தவராக செயற்படுகின்றோம். ஆகவே இரண்டு அரசாங்கத்தின் செயற்பாடுகளும் எம்மால் நன்றாக அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
மஹிந்தவின் அரசாங்கத்தில் செய்யமுடியாத அனைத்தும் இந்த அரசாங்கத்தின் மூலம் செய்து காட்டியுள்ளோம். மூவின மக்களின் மனங்களையும் வென்றெடுத்து ஜனநாயக ரீதியிலான ஆட்சியை அமைத்துள்ளோம். அதேபோல் சர்வதேச உறவையும் பலபடுத்தியுள்ளோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சரியான தீர்மானங்கள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் முன்னெடுக்கும் ராஜதந்திர நகர்வுகள் என்பன நாட்டை சரியான பாதையில் வழிநடத்துகின்றது.
இன்றும் மஹிந்தவின் கொள்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் நாட்டின் நிலைமை மாறியிருக்கும். மஹிந்த இன்றும் ஆட்சியில் இருந்திருந்தால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் கடினமானதாக அமைந்திருக்கும். மஹிந்த சர்வதேச நீதிமன்றின் தலையீட்டுடன் கைது செய்யப்பட்டிருப்பார். அதேபோல் இராணுவமும் குற்றவாளிகள் என ஒரு தீர்மானம் முன்னெடுக்கப்பட்டிருக்கும்.
அவ்வாறான சூழ்நிலையில் இருந்து நிலைமைகள் மாறியுள்ளது. அதேபோல் சர்வதேச விசாரணைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்ற நிலையில் நாம் உள்ளக பொறிமுறையை கோருவது மஹிந்த ராஜபக் ஷவை காப் பாற்றும் நோக்கத்திலோ அல்லது அவரது செயற்பாடுகளை மூடி மறைக்கும் நோக் கத்திலோ அல்ல. எமது நாட்டையும் எமது இராணுவத்தையும் காப்பாற்றவே இந்த விசாரணை செயற்பாடுகளை எதிர்க்கின் றோம் எனக் குறிப்பிட்டார்.





