சவூதி அரசாங்கமே ஹஜ் யாத்திரை சனநெரிசலில் இடம்பெற்ற மரணங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் !!

465

makka1சவூதி அரேபியாவில் மக்காவுக்கு அண்மையிலுள்ள மினா நகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற சனநெரிசலில் குறைந்தது 43 ஈரானியர்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஈரான் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புத் தொடர்பான தவறுகளே இதற்குக் காரணம் எனவும் இந்த அனர்த்தத்திற்கு சவூதி அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதி வெளிநாட்டு அமைச்சர் ஹொஸைன் அமீர் அப்துல்லாஹியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆஜராகி விளக்கமளிக்க ஈரானுக்கான சவூதி தூதுவருக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது.
மேற்படி சனநெரிசலில் சிக்கி குறைந்தது 717 பேர் பலியானதுடன் 805 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இறந்த ஈரானியர்கள் அனைவரதும் பெயர்களும் அந்நாட்டில் நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்படி சனநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் பலர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையில் இந்த சம்பவத்தில் பலியான ஈரானியர்கள் தொகை மென்மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுவதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.