இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதோடு இதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில் இதற்கான ஊடகச் சந்திப்பு கொழும்பில் நேற்று இடம்பெற்றிருந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சிதத் வெத்தமுனி, செயலாளர் பிரகாஷ் ஷாப்டர், பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆஷ்லி டீ சில்வா, இலங்கை அணியின் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், டயலொக் நிறுவனத்தின் பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்வருடம் 65க்கும் மேற்பட்ட தேசிய வீர வீராங்கணைகளுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளன. 2014 – 2015 பருவ காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட திறமை வெளிப்பாடுகள் இவ்விருதுகளுக்காகக் கருத்திற் கொள்ளப்படவுள்ளதுடன், சர்வதேசப் போட்டிகள், உள்ளூர்ப் போட்டிகளில் வெளிப்படுத்தப்பட்ட திறமை வெளிப்பாடுகள் கௌரவிக்கப்படவுள்ளன. பெண்கள் பிரிவில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை, சிறந்த பந்துவீச்சாளர் ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
ஆண்களுக்கான பிரிவுகளில் சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர், டெஸ்ட் பந்து வீச்சாளர், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட வீரர், பந்து வீச்சாளர், சகலதுறை வீரர் ஆகிய விருதுகளும், இவ்வருடத்திற்கான சிறந்த வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருதும், டயலொக் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதும், டயலொக் மக்கள் தெரிவு வீரருக்கான விருது உட்பட விருதுகள் வழங்கப்படவுள்ளன.
சர்வதேசப் போட்டிகளுக்கான விருதுகளை இலங்கையின் தேசிய தெரிவாளர்களும், உள்ளூர்ப் போட்டிகளுக்கான விருதுகளை இலங்கையின் தொடர்களுக்கான ஏற்பாட்டுக் குழுவும் முடிவு செய்யவுள்ளன.
தமது விருப்பமான வீரர்களுக்கு டுவிட்டர் மற்றும் பேஸ்புக் மூலம் வாக்களிப்பதற்கு இந்த தொடுகையின் மூலம் வாக்களிக்கலாம். http://sm.dialog.lk/awards/ (link is external)
மேலும் தனது கையடக்கத் தொலைபேசியில் இருந்து வாக்களிப்பதற்கு Type DPP space <player’s name> SMS to 2343 or http://sm.dialog.lk/awards/sms/ (link is external)
வாக்குகளை அடுத்த மாதம் 18 ஆம் திகதி வரை செலுத்தலாம்.





