ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள லங்கா சமசமாஜக் கட்சி, அறிக்கையை நிராகரிப்பதாகவும் அதனை ஏற்றுக் கொண்டால் நாடு பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் படை அதிகாரிகளை இலக்கு வைத்தே இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும் லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண மேலும் தெரிவித்திருப்பதாவது,
தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதும் எமது நிலைப்பாடாகும். அதற்காக இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுப்பட வேண்டும். யுத்தக் குற்றச் சாட்டுக்களில் சிக்கிக் கொண்டவர்கள் தொடர்பான விசாரணைகளை எம்மால் மேற்கொள்ள முடியும். இதற்கும் சர்வதேச உதவி தேவையென்றால் அதனை நாமே கோர வேண்டும் ஆனால் சர்வதேசம் பலாத்காரமாக தலையிட முடியாது.
ஐ.நாவின் அறிக்கையையும் அதிலுள்ள விடயங்களையும் நாம் நிராகரிக்கின்றோம்.இவ்வறிக்கையில் குற்றச்சாட்டுக்கள் மிகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்ளக விசாரணைக்குள் தலையிடும் வாய்ப்பை சர்வதேசம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.எமது நாட்டில் திறமையான நேர்மையான நீதிபதிகள் வழங்கறிஞர்கள் உள்ளனர்.
உலகின் பல நாடுகளில் எமது நீதித்துறையினருக்கு வரவேற்பு உள்ளது. எமது நாட்டின் நடந்தது என்ன. இதற்காக என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சர்வதேச சமூகம் எனக் கூறிக் கொள்வோரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அத்தோடு டிஜிட்டல் தொழில்நுட்பம் தொடர்பாக “நெவாட்டில் ” ஏற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்க பேராசிரியரொருவர் ” சனல் 4″ வீடியோ பொய்யானதென்றும் தெரிவித்துள்ளார்.நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் 104 பக்கங்களில் சாட்சியங்கள் வழங்க ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையில் உரிய இடம் வழங்கப்படவில்லை.
யுத்தத்தில் ஒருவர் மரணிக்கும் போது 4 பேருக்கு மேலதிகமானோர் காயமடைகின்றார்கள் என சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே ஐ.நா. அறிக்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் 40000 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளமை உண்மையெனில் காயமடைந்தோர் எண்ணிக்கை 160000 200000க்கும் இடையேயான தொகையாக இருந்திருக்க வேண்டும்.
போதுமானளவு சாட்சியங்கள் இல்லாமையால் அறிக்கையில் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உட்பட இராணுவத் தளபதி தெரிவு செய்யப்பட்ட படை அதிகாரிகளை இலக்கு வைத்தே இவ் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக பொய்யான தகவல்களையும் சாட்சியங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இவ்வாறு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டாலும் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் சீனா, ரஷ்யா நாடுகள் எமது நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இடமளிக்காது. ஆனால் இது சர்வதேச யுத்த நீதிமன்ற பொறிமுறைக்கு அடித்தளமாக அமையும் ஐ.நா.வின் கலப்பு நீதிமன்ற பொறிமுறை சட்ட ரீதியான வரையறைக்குள் உள்ளடங்காது.
எனவே எந்தவொரு நிலையிலும் அழுத்தங்களுக்கு அடிபணியாது. நாட்டின் சுதந்திரமும் இறையாண்மை மற்றும் நற்பெயரை பாதுகாக்கும் விதத்தில் நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.





