சவூதி அரேபியாவில் புனித நகரான மக்காவுக்கு அருகிலுள்ள மினா நகரில் இடம்பெற்ற சனநெருக்கடியில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததையடுத்து யாத்திரிகர்களுக்கான பாதுகாப்பு தொடர்பான மீள்பரிசீலனையொன்றுக்கு அந்நாட்டு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி சனநெருக்கடி அனர்த்தத்தில் சிக்கி 863 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இறுதி ஹஜ் மத வைபவமொன்றில் சுமார் இரு மில்லியன் மக்கள் பங்கேற்றிருந்த வேளையிலேயே இந்த சனநெருக்கடி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 25 வருட காலப் பகுதியில் யாத்திரை காலத்தில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது. யாத்திரிகர்களின் நகர்வின் ஏற்பாடு மற்றும் முகாமை மட்டத்தில் அபிவிருத்தி தேவையாகவுள்ளதாக மன்னர் தெரிவித்தார்.
இந்நிலையில் மேற்படி சனநெருக்கடி அனர்த்தம் குறித்து விசாரணை செய்வதற்கு சவூதி அரசாங்கத்தால் ஆணையகமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு கௌரவமளிக்காது பெருந் தொகையான யாத்திரிகர்கள் ஒரேசமயத்தில் புறப்பட்டமை காரணமாகவே இந்த சன நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சவூதி அரேபிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
இது கடந்த இரு வார காலப் பகுதியில் மக்காவில் யாத்திரிகர்கள் தொடர்பில் இடம்பெற்ற இரண்டாவது அனர்த்தமாகும். மக்காவில் விஸ்தரிப்பு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த பாரந்தூக்கி உபகரணமொன்று சரிந்து விழுந்ததால் இடம்பெற்ற முதலாவது அனர்த்தத்தில் 109 பேர் பலியாகியிருந்தனர்.





