என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக ஜனாதிபதியுடன் தஹாம் சிறிசேனவும் சென்றுள்ளார். இதனால் கடந்த ஆட்சியில் மஹிந்த ராஜபக்ஷ தனது புதல்வர்களை பிரசித்தப்படுத்தியது போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது மகனை பிரசித்தம் படுத்துகின்றார் எனவும் தற்போதும் குடும்ப ஆட்சி இடம்பெறுகின்றது எனவும் ஊடகங்கள் விமர்சனம் செய்திருந்தன.
இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்தே தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள தஹாம் சிறிசேன,
‘ குடும்ப ஆட்சி என்னது என்ன? அதிகாரத்தில் உள்ளவர்களின் செல்வாக்கை பயன்படுத்தி மகன்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதே குடும்ப ஆதிக்கமாகும். இந்த குடும்ப ஆதிக்கம் தற்போதைய ஆட்சியில் இருக்கின்றதா என்பதை நீங்கள் சற்று பார்க்க வேண்டும். ஐக்கிய நாடுகள் அமர்வில் பங்கேற்றுள்ள இலங்கை தூதுக் குழுவில் நான் பங்கேற்றுள்ளதால் என்னை விமர்சனம் செய்வதோடு எனது தந்தையையும் நியாயம் இல்லாமல் விமர்சனம் செய்வதோடு குடும்ப ஆட்சி என்கின்றனர். எனது தந்தையின் அமெரிக்க விஜயத்தின் போது எனது தாயாருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அவர் அதில் பங்கேற்க முடியாமல் போனமை காரணமாகவே தான் அதில் பங்கேற்றேன். நான் இளைஞராக மாநாட்டில் பங்கேற்றமையால் நாட்டின் முன்னேற்றத்திற்காக நிறைய விடயங்களை அறிந்துகொண்டேன். இதனால் நாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. இதனால் நாடு வீழ்ந்து விடப்போவதில்லை.
எனவே தம்மையும் தமது குடும்பத்தினரையும் முன்னைய ஆட்சியாளருடன் ஒப்பிடவேண்டாம். இதேவேளை அடுத்த தடவை இலங்கையில் இருந்து திறமைமிக்க இளைஞர்கள் ஐக்கிய நாடுகளின் இளைஞர் மாநாட்டில் பங்கேற்க செய்வதோடு அவர்களின் புதுமையான யோசனைகளால் நாட்டை முன்னேற்ற முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.





