காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடானது வரவேற்கப்பட வேண்டியதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தமது உறவுகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வந்ததுடன் அரசாங்கத்திடமும் தொடர்ச்சியாக அழுத்தமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சான்றிதழ்கள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென உள்விவகார அமைச்சு அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது.
தமது உறவினர் உயிரிழக்கவில்லை என ஏற்றுக்கொள்ள மறுதலிப்போருக்கு இந்த விசேட சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிறுவனத்தின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அதனை வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





