தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றதா?

517

Dhanush5

மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமானது உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று 30ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடாத்தியது.

குறிப்பிட்ட மாநாட்டின் போது ஜுன் மாதத்திலிருந்து செப்டெம்பர் மாதம் வரை வெளியான தென்னிந்திய தமிழ் திரைப்படங்களில் சிறுவர்களை மதுசாரம் மற்றும் சிகரட் உட்பட ஏனைய போதைப் பொருள் பாவனைக்கு ஏமாற்றியிருக்கும் விதம் தொடர்பிலான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.

குறிப்பிட்ட ஆய்வறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

18 படங்களிலும் மொத்தமாக சிகரட் மற்றும் மதுசார வகைகளை விளம்பரப்படுத்திய நேரம் 144.24 நிமிடங்கள். குறிப்பிட்ட காலப்பகுதியில் வெளியான திரைப்படங்களின் மொத்த நேரம் 2349 நிமிடங்கள்.

இந்த நேர அளவானது ஒரு தனி திரைப்படத்திற்குரிய நேர அளவு என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக சிகரட்டை விளம்பரப்படுத்திய திரைப்படம் மாரி.

இத்திரைப்படத்தில் மதுசாரம் மற்றும் சிகரட் விளம்பரமாகிய மொத்த நேரம் 21.97 நிமிடங்கள், சிகரட் விளம்பரமாகிய நேரம் 18.22 நிமிடங்கள் ஆகும்.

இத்திரைப்படத்தில் அதிக ரசிகர்களை கவர்ந்த நடிகர் தனுஷ் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலாபத்தை எட்டிய திரைப்படமென்பதுடன், திரைப்பட விளம்பர காணொளியில் சிகரட் விளம்பரம் கவர்ச்சிகரமான விதத்தில் காட்டப்பட்டிருந்தது.

கூடுதலாக மதுசாரத்தை விளம்பரப்படுத்திய திரைப்படம்: வாசுவும் சரவணனும்.

இத்திரைப்படத்தில், மதுசாரம் விளம்பரமாகிய நேரம் 24..57 நிமிடங்கள் ஆகும்.

மேலும் நகைச்சுவை நடிகர் சந்தானம், பிரபல நடிகர் ஆர்யா இருவரும் தங்களின் கலைத்திறமையை உயர்ந்தளவில் பாவித்து மதுசாரத்தை விளம்பரப் படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது.

இதில் இறுதி கட்டத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றி பியர் குடிக்கும் விதத்தை விளக்கியிருப்பதானது மதுசாரத்தை தூண்டக்கூடிய குறிப்பிட்ட கம்பனிகளினால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரமாகவே கருதப்படுகின்றது.

18 திரைப்படங்களில் 17 திரைப்படங்கள் மதுசாரம் சிகரட் உட்பட ஏனைய போதைப் பொருட்களை விளம்பரப்படுத்தியிருக்கின்றன.

´இது என்ன மாயம்´ என்ற திரைப்படம் மாத்திரமே எந்த விதமான போதைப் பொருள் விளம்பரங்களும் இல்லாமல் வெளிவந்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்த திரைப்பட நேரத்தில் சாராயம் 48 நிமிடங்கள், சிகரட் விளம்பரமாகியிருக்கும் நேர அளவு 46.06 நிமிடங்கள், பியர் 46.12 நிமிடங்கள், ஏனைய போதைப் பொருட்கள் 02 .04 நிமிடங்களும்; விளம்பரமாகியிருக்கின்றன.

ஆய்வு மேற்கொள்ளப்பட்ட காலப்பகுதியினுள் சந்தானம் என்ற நகைச்சுவை நடிகரே அதிக மதுசாரம் மற்றும் சிகரட் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 18 திரைப்படங்கள் வெளிவந்த அதே நேரத்தில் கூடுதலான தந்திரோபாயங்களை பயன்படுத்தி மதுசாரம் மற்றும் சிகரட் போன்றவைகளும் விளம்பரப் படுத்தப்பட்டுள்ளன.

மொத்த நேரத்தில் காட்சிகளில் விளம்பரப்படுத்திய வீதம் 57.4%, பொதுவான வார்த்தைகளில் விளம்பரப்படுத்திய வீதம் 14.2%, நகைச்சுவையின் மூலம் வார்த்தைகளில் விளம்பரப்படுத்திய வீதம் 11.6%, விஷேட வார்த்தைகளின் மூலம்; விளம்பரப்படுத்திய வீதம் 7.4%, பாடல் வரிகளின் மூலம் விளம்பரப்படுத்திய வீதம் 11.6%.

ஆய்வு முடிவுகள் பற்றி ADIC இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் புபுது சுமனசேகர அவர்களும், திரைப்பட விளம்பரங்கள் சிறுவர்களைக் கவரும் விதம் பற்றி சிரேஷ்ட உள நல வைத்தியர் ஆ.கணேசன் அவர்களும், புகைத்தல் மற்றும் மதுசார பாவனையினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக வைத்திய கலாநிதி அனுஷாந்தன் அவர்களும், திரைப்பட, ஊடக விளம்பரங்கள் மூலம் சிறுவர்கள் ஏமாறுவதைத் தடுக்க சமூகத்தினால் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ளு.ஜீவசுதன் அவர்களும் சிறப்புறையாற்றினார்கள்.

மேலும் குறிப்பிட்ட நிகழ்வின் போது போதைப் பொருள் சம்பந்தமான தகவல்களை உள்ளடக்கிய ´நிதர்சனம்´ என்ற பத்திரிகையொன்றும் வெளியிடப்பட்டது.