நீண்டகாலத் தேடல் முடிவு : இரு அன்பு உள்ளங்களை சேர்த்து வைத்த பேஸ்புக்!!

359

FB

பேஸ்புக்கில் மூழ்கிக் கிடப்பதால் என்ன பயன் எனப் பலரும் வெறுத்து ஒதுக்கும் வேளையில், ஒரு அழகான பந்தம் அதன் உதவியால் தொடர்ந்துள்ளது.

அமெண்டா ஸ்கார்பினாத்தி (40) என்ற பெண், மூன்று மாத கைக்குழந்தையாக இருந்தபோது கடுமையான தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அப்போது, அவரை ஒரு தாதி ஆதரவாக அரவணைத்து பராமரித்திருக்கிறார்.

தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், பெயர்கூட அறியாத அந்தத் தாதி தன்னை ஆதரவாக அரவணைத்த புகைப்படத்தை மட்டும் வைத்துக்கொண்டு அவரைத் தேடி வந்துள்ளார் அமெண்டா.

நீண்ட தேடலில் தென்படாதுபோன அந்த தாதியை அறிந்துகொள்ளும் ஆசையில், இறுதி முயற்சியாக கடந்த மாதத் தொடக்கத்தில் அமெண்டா பொக்கிஷமாக வைத்திருந்த அந்தப் புகைப்படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.

1977ல் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதும், அதே மருத்துவமனையில் அந்தக் காலகட்டத்தில் படத்தில் இருக்கும் பெண்ணுடன் பணிபுரிந்த இன்னொருவர் மூலமாக ஒரே நாளில் அடையாளம் தெரிந்தது.

சூ பெர்கர் என்கிற அந்தச் நர்ஸ் தற்போது, நியூயோர்க் நகரக் கல்லூரியில் நிர்வாக துணை தலைவர் பதவியில் உள்ளார். நேற்று இவர்கள் இருவரும் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்து, தமது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

மூன்று மாதக் குழந்தைக்கு இளம் தாதி கொடுத்த அரவணைப்பு எவ்வளவு அழகாக வளர்ந்துள்ளது! இவர்களின் பிணைப்புக்கு பேஸ்புக் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.