குழந்தை ‘சேயா’ மீதான வன்புணர்வுப் படுகொலையைக் கண்டித்து யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம்!!

620

Capture

சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும், படுகொலைகளும் மிகவும் அதிகரித்துச் செல்லும் அபாயகரமானதொரு சூழல் இன்று இலங்கை முழுவதும் தோன்றியுள்ளது. இது ஒட்டுமொத்த மக்களதும் எதிர்கால வாழ்வைப் பாதிக்கின்ற பாரியதொரு ஆபத்தாகப் பூதாகரமடைந்துள்ளது.

இப் படுபாதகச் செயல்கள் சின்னஞ்சிறு குழந்தைகள் மீதும் கட்டவிழ்த்து விடப்படுவது மிகவும் கண்டிக்கப்படவேண்டும். அண்மையில் இடம்பெற்ற புங்குடுதீவு மாணவி வித்தியா மீதான வன்புணர்வுப் படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் நடாத்தப்பட்டது.

இதன்போது ஜனாதிபதி உட்பட பல்வேறு தரப்பினராலும் இத்தகைய செயல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு கருத்துக்களும் வெளியிடப்பட்டபோதும், தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் இவ் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கோ, இவற்றுக்குக் காரணமான இருக்கின்ற பொருளாதார, சமூக, பண்பாட்டுக் காரணிகளை இனங்கண்டு இல்லாமல் செய்வதற்கோ ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் இதுவரை அரசால் மேற்கொள்ளப்படாமை குறிப்பிடத்தக்கது. இக் கொடூரங்களின் தொடர்ச்சிக்கு அண்மையில் கொட்டதெனிய பிரதேச சிறுமி சேயா பலியாகியுள்ளாள்.

இனியும் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாதபடி, உரிய சட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் உடனடிக் கடமையாகும். இந்த வருடத்தில் மாத்திரம் இதுவரை சுமார் 6,500 பெண்கள், சிறுவர்களுக்கு எதிரா வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளமை பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ் வன்கொடுமைகளைக் கண்டித்தும், போதைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தக் கோரியும், பாரபட்சமின்றிய சட்ட நடவடிக்கையை வலியுறுத்தியும் பொது அமைப்புக்களால் எதிர்வரும் 03.10.2015 சனிக்கிழமை அன்று மு.ப. 10 மணியளவில் யாழ்ப்பாண பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

ச. தனுஜன்
இணைச் செயலாளர்