வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!!

865

SAM_3120

 

என்னை இந் நிலைக்குயர்த்திய ஆசான்களை நன்றியுணர்வுடன் நினைவு கூர்ந்தவனாக ஆசிரியர்கள் அனைவருக்கும் உலக ஆசிரியர் தின நல்வாழ்த்ததுக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

அனைத்து ஆசிரியகளும் உடல் உள ஆரோக்கியத்துடன் எல்லா நலங்களும் பெற்று இன்புற்று வாழ இந்நன்நாளில் வாழ்த்தி நிற்கிறேன்.

மாதா பிதா குரு தெய்வம் என்னும் வாக்கில் தெய்வங்களுக்கும் முதன்மையாகக் வைத்துப் போற்றப்படுபவர்கள் ஆசிரியப் பெருந்தகைகள். மனித சமுதாயத்தின் மத்தியில் அவர்களுக்கென்று தனி மதிப்பும் கௌரவமும் அளிக்கப்படுகிறது. எதிர்காலத்திற்கான நற்பிரசைகளை உருவாக்கும் சமூகப் பெரும்பணியை பொறுப்பெடுத்துக் கொண்டவர்கள்.

மாணவர்களதும் சமுதாயத்தினதும் கல்வி கலாச்சார பண்பாட்டு ஒழுக்கநெறிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு பங்கினை வகிப்பவர்கள். மனித மாண்புகளையும் விழுமியங்களையும் பேணிப் பாதுகாப்பவர்கள். பாடசாலைகளிலும் பாடசாலைகளுக்கு வெளியிலும் நடை உடை செயற்பாடுகள் அனைத்திலும் முன் மாதிரியாகவும் வழிகாட்டிகளாகவும் திகழ்பவர்கள். திகழ வேண்டியவர்கள்.

இத்தகைய குணாம்சங்களை உண்மையாகவே கொண்ட ஆசிரியர்களை ஆசிரியர் தினத்தில் மட்டுமன்றி எந்நாளும் போற்றி அவர்தம் சேவைகளை நன்றியுணர்வுடன் பாராட்டுவது அனைவரதும் தலையாய கடமையாகும்.

இத்தகைய மதிப்பும் சமுகப் பொறுப்பும் உடைய ஆசிரியர்கள் ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தைப் பேணிப் பாதுகாத்து நடக்க வேண்டிய பாரிய கடமை இவர்களுக்கு உண்டு. ஆயினும் சில ஆசிரியர்களது செயற்பாடுகளும் நடத்தைக் கோலங்களும் ஆசிரியர்களின் மகத்துவத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி வருவது கவலைக்குரியதாகும்.

இன்றைய காலகட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் சமூகத்திலும் காணப்படுகின்ற அதிகரித்துச் செல்லும் போதைப் பொருட்பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற சமூக விரோதச் செயற்பாடுகளை நிறுத்தக்கூடிய சமூகப் பொறுப்பு ஆசிரியர் சமூகத்தையே சார்ந்தாகும்.

ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் தமது கடமைப் பொறுப்புக்களை உணர்ந்து ஆசிரியத்துவத்தின் மகத்துவத்தைப் பேணி அர்ப்பணிப்புடன் கல்விப்பணிகளை ஆற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

இத்தகைய சமூகப் பெரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியப் பெருந்தகைகளை கௌரவிப்பதும் அவர்களுக்கு கீழ்ப்படிந்து ஒழுக்க விழுமியங்களைப் பேணி வாழ்வதும் மாணவர்களதும் பெற்றோர்களினதும் கடமையாகும்.

வாழ்க ஆசிரியத்துவம்

இ.இந்திரராசா
வடமாகாண சபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்.