வவுனியாவில் 936 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட கைதிகள் உள்ளனர். அவர்களை கைது செய்ய பிரதேச செயலகம் உதவி செய்ய வேண்டும் என வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண்.அபேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
நான் வவுனியாவில் கடந்த 3 வருடமாக பணியாற்றுகின்றேன். 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளேன். ஆனால் குற்றவாளிகளை கைது செய்வதற்கு கிராம சேவை அலுவலர்களின் உதவி எனக்கு கிடைக்கவில்லை. இந்தக் குற்றவாளிகள் ஒவ்வொரு கிராம வேவை அலுவலரின் பிரிவுகளிலும் தான் வசித்துள்ளார்கள். குற்றவாளிகளை இனங்காட்ட கிராம அலுவலர்கள் உதவவேண்டும். தற்போது வவுனியாவில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 936 குற்றவாளிகள் இருப்பதாக எம்மிடம் தகவல்கள் உள்ளன. இதில் எத்தனை பேர் தற்போது வவுனியாவில் உள்ளனர்? வெளிநாடு சென்றோர் எத்தனை பேர்? இறந்தவர்கள் எத்தனை பேர் எனத் தெரியாது.
இவர்களின் விபரங்களை நான் பிரதேச செயலாளரிடம் கையளிக்கின்றேன். அவர்கள் தொடர்பான தகவல் கிடைத்தால் உடனடியாக பிரதேச செயலாளர் ஊடாக தமக்கு தெரியப்படுத்துமாறும் கோருகின்றேன் எனவும் கூறினார்.
இதேவேளை குற்றவாளிகளின் பெயர் விபரப் பட்டியலை ஏற்றுக் கொண்ட பிரதேச செயலாளர் அதன் விபரங்களை கிராம அலுவலர்களிடம் இருந்து பெற்று பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதாக தெரிவித்தார்.