உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜெர்மனியின் அரச தலைவி ஏஞ்சலா மெர்கெல் மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்தியாவில் தொழில் தொடங்க ஜெர்மனி நிறுவனங்களுக்கு விரை வாக அனுமதி வழங்குவது, இந்திய சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ஜெர்மனி ரூ.7,300 கோடி நிதியுதவி வழங்குவது உட்பட 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இரு நாடுகள் இடையே நேற்று கையெழுத்தாகின.
ஜனாதிபதி மாளிகையில் ஏஞ்சலா மெர்கெலுக்கு நேற்று காலை சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந் திர மோடியை மதியம் சந்தித்தார். அங்கு இரு நாட்டு அரசுகள் இடையிலான 3-வது ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மெர்க்கல் தலைமையிலான குழுவினரும் மோடி தலைமையிலான குழுவினரும் இருதரப்பு வர்த்தக உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது உணவு பாதுகாப்பு, பேரழிவு மேலாண்மை, பாதுகாப்பு துறை, திறன் மேம்பாடு, கல்வி, வேளாண்மை, ஆராய்ச்சி, சிவில் விமான போக்குவரத்து, விஞ்ஞானம், தொழில்நுட்பம், நிறுவன மேலாண்மை, சூரியஒளி மின்சக்தி உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாக மொத்தம் 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தகியுள்ளன.





