
இரண்டு மாதத்தில் இந்திய கிரிக் கெட் சபையை சுத்தம் செய்வேன் என்று புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இருந்த டால்மியா கடந்த 20ஆம் திகதி மரணமடைந்தார். இதைதொடர்ந்து கிரிக்கெட் சபை யின் புதிய தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக ஷசாங் மனோகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாக்பூரை சேர்ந்த ஷசாங் மனோகர் தற்போது இரண்டாவது முறையாக கிரிக்கெட் சபை தலை வராகிறார்.
இதற்கு முன்னதாக, 2008ஆம் ஆண்டிலிருந்து 2011-ஆம் ஆண்டு வரை அவர் தலைவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மனோகர் “ என்னுடைய முதல் நடவடிக்கை கிரிக்கெட் சபையின் மீதுள்ள தவறான பிம்பத்தை மாற்றி, ரசிகர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவது தான். என்னுடைய திட்டங்களை அமுல்படுத்தி கிரிக்கெட் சபையை தூய்மைப்படுத்த இரண்டு மாதம் அவகாசம் கேட்டுள்ளேன். இரண்டு மாதத்திற்கு பிறகு எந்த கேள்விக்கும் பதில் அளிக்க தயாராக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.





