ராஞ்ஜனா 100 கோடி வசூல் – முதல் படத்திலேயே தனுஷ் சாதனை!

347

ranjana

தனுஷ் – சோனம் கபூர் நடிப்பில் இந்தியில் வெளியான ராஞ்ஜனா 100 கோடியை வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. பாலிவுட்டில் எந்த புதிய நடிகருக்கும் கிடைக்காத கவுரவமாக இது பார்க்கப்படுகிறது. இந்த வெற்றி தனுஷின் சமீபத்திய வெளியீடான மரியானுக்குக் கிடைத்த மரண அடிக்கு ஒத்தடமாக அமைந்துள்ளது.

தனுஷ் நடித்த முதல் இந்திப் படம் இந்த ராஞ்ஜனா. ஆனந்த் எல்ராய் இயக்கியிருந்தார். சோனம் கபூர் நாயகியாக நடித்தார். ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். கடந்த ஓராண்டாக தயாரிப்பிலிருந்த ராஞ்சனா கடந்த மாதம் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியானது. காதல் – அரசியல் கலந்த இந்தப் படத்து நல்ல ஆரம்பம் கிடைத்தது.

படத்தை வட இந்திய மீடியாக்கள் கொண்டாடின என்றால் மிகையல்ல. குறிப்பாக தனுஷ் நடிப்பை பாராட்டின. இந்த ஆண்டும் அவருக்குத்தான் தேசிய விருது என்றெல்லாம் எழுதின. அதற்கு தான் தகுதியானவர்தான் என தனுஷும் படத்தில் நிரூபித்திருந்தார்.

தமிழில் இந்தப் படம் அம்பிகாபதி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியானது. எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் இந்தப் படத்துக்கும் சிறப்பான ஆரம்பம் கிடைத்தது தமிழகத்தில். முதல் மூன்று நாட்களில் 2 கோடி வரை இந்த டப்பிங் படம் வசூலித்தது.

ராஞ்ஜனா படம் உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்காவில் ஓரளவு திரையரங்குகள் பிடித்திருந்தனர். படத்தின் வெற்றி கூடுதல் அரங்குகளில் படத்தை வெளியிட வைத்தது. இந்தியாவில் உபி, டெல்லி, பீகார் பகுதிகளில் படம் சூப்பர் ஹிட்.

ஒரு படத்தின் வசூலை நிர்ணயிக்கும் பெரிய ஏரியாக்கள் இவை. மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேஷிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு. வட மேற்கு இந்தியாவில் இந்தப் படம் அதிக அரங்குகளில் வெளியாகி வசூலை அள்ளியது. இதன் விளைவு வெளியான மூன்று வாரங்களில் ரூ 100 கோடியை குவித்துள்ளது ராஞ்ஜனா.

படத்தின் இந்த பிரமாண்ட வெற்றியைக் கொண்டாடும் விதமாக இன்று மும்பையில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்கிறார்கள் நடிகர் தனுஷ். அவரைப் பொறுத்தவரை, கடின உழைப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் கிடைத்த பெரிய வெற்றி இந்த 100 கோடி!