இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் நோக்கில் உத்தியோக பற்றற்ற பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஏனைய தமிழ் கட்சிகளுடனும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அரசியல் நோக்கமாக புதிய அரசியலமைப்பை தயாரித்தல், மனித உரிமை மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பலப்படுத்தல் என்பன இருந்தாலும் அவற்றில் மிக முக்கியமானது அரசியல் தீர்வைக் காண்பதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளான அரசியல் தீர்வு, தேசிய ஒற்றுமை, மற்றும் மதப் பிரச்சினைகளை தீர்ப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மொழி, மற்றும் இனப்பிரச்சினை விவகாரங்கள் கடந்த ஐந்து தசாப்தகாலமாக நாட்டை ஆக்கிரமித்துள்ள நிலையில் மதப் பிரச்சினை கடந்த தசாப்தத்தில் உருவாகியிருந்தது.
இவற்றை பலமான இலங்கை என்ற அடையாளத்துடன் தீர்க்கவேண்டியது அவசியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார் என்று ‘இந்துப் பத்திரிகை’ தெரிவித்துள்ளது. இதே கருத்துக்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.