ஜெயலலிதா சொத்து வழக்கு – விசாரணை 6 வாரம் ஒத்திவைப்பு??

746

M_Id_404165_Tamil_Nadu_CM_Jayalalithaசொத்து குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளது. இதே போல் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், ஆர்.கே.அகர்வால் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணை நடைபெறுகிறது. இதில் ஜெயலலிதா உள்பட 4 பேரும் 3 வாரத்துக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி பதில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த மனுக்கள் மீது 3 வாரத்தில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யுமாறு கர்நாடக அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

வருகிற 12ஆம் திகதி மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் கர்நாடக அரசு மற்றும் க.அன்பழகன் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதலாக 6 வார கால அவகாசம் தேவைப்படுகிறது. எனவே வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.