கின்னஸ் சாதனை நடிகை ஆச்சி மனோரமா காலமானார்!!

938

Manorama

தமிழ்த் திரையுலகில் “ஆச்சி´ என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட பிரபல நடிகை மனோரமா (78) சென்னையில் சனிக்கிழமை இரவு காலமானார்.

களத்தூர் கண்ணம்மா, திருவிளையாடல் உள்பட 1,500 திரைப்படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்த மனோரமா, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு 11.30 மணிக்கு இறந்தார். அவர் இறக்கும்போது மகன் பூபதி, பேரன் டாக்டர் ராஜராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நகைச்சுவை நடிகையாக…: மனோரமாவின் இயற்பெயர் கோபி சாந்தா. இவரது பெற்றோர் காசி கிளாக் உடையார் மற்றும் ராமாமிர்தம். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பிறந்த மனோரமா, சிறு வயதில் வறுமை காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தார்.



படிக்கும்போதே மேடை நாடகங்களில் பாட்டு பாடி நடிக்கத் தொடங்கினார். கவியரசு கண்ணதாசன் தயாரித்த “மாலையிட்ட மங்கை´ திரைப்படத்தில் முதன்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். செட்டி நாட்டில் வசித்ததால் “ஆச்சி´ என்ற பெயரைப் பெற்றார்.

தேசிய விருதான பத்மஸ்ரீ, தேசிய திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். 1989-இல் நடிகர் பார்த்திபனின் புதிய பாதை படத்தில் நடித்ததற்காக சிறந்த குணசித்திர நடிகை என்ற தேசிய விருதைப் பெற்றார்.

இயக்குநர்கள் ஏ.பி.நாகராஜன், கே.பாலசந்தர் உள்ளிட்ட பல பிரபல இயக்குநர்களின் படங்களில் நடித்தவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, அஜீத், விஜய் உட்பட அனைத்து பிரபல நடிகர்களுடனும் நடித்தவர். குறிப்பாக, பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்து ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவர் நடிகை மனோரமா.

திரைப்படங்களில் நடிகை மனோரமா பாடிய பாடல்களும் பிரபலமானவை. “வா வாத்தியாரே´ (பொம்மலாட்டம்), “தில்லிக்கு ராஜான்னாலும்´ (பாட்டி சொல்லைத் தட்டாதே) “மெட்ராச சுத்திப் பாக்க´ (மே மாதம்), “தெரியாதோ நோக்கு தெரியாதோ´ (சூரியகாந்தி), “பார்த்தாலே தெரியாதா´ (ஸ்ரீ ராகவேந்திரா) உள்ளிட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் நீலகண்ட மேத்தா தெருவில் உள்ள அவரது இல்லத்தில் (மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் இல்லம் அருகில்) நடிகை மனோரமாவின் உடல் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது.