வன்னியின் மத்தியான வவுனியா நகரில் புகழ்பெற்ற வவுனியா சைவப்பிரகாசா மகளிர் கல்லூரி தமிழுக்கும், கல்விக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றி வருகின்றது.
இக்கல்லூரியின் புகழ் அகிலமெங்கும் பரவ கடந்த இரு தசாப்தங்களாக பிரதி அதிபர் மற்றும் அதிபர் என இருவேறு பதவிநிலையினை ஏற்று கல்லூரியை முன்னேற்றி ஓய்வு பெறும் மதிப்பிற்குரிய அதிபர் செல்வி. உமா இராசையா அவர்களை எண்ணும்போது மனம் நெகிழ்கிறது.
இவரது வாழ்வின் பெரும்பகுதி கல்வி கற்பதிலும் கற்றுக்கொண்டே கல்விப்பணியை மேற்கொள்வது என உருண்டோடி இவர் ஓய்வு நிலைக்கு வந்துள்ளபோதிலும், மதிப்பிற்குரிய அதிபர் செல்வி. உமா இராசையா அவர்களை அந்நிலையில் வைத்துப் பார்க்கமுடியவில்லை.
கலைப்பட்டம், பட்டப்பின்படிப்பு கல்வி டிப்ளமோ, முகாமைத்துவ டிப்ளமோ போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளதுடன், இவரது கல்விப்பணிக்கு கட்டியம் கூறுமாப்போல் இலங்கை அரசினால் கல்விப்பணிச் சேவைக்கென வழங்கப்படும் உயரிய விருதான பிரதீபா பிரபா விருதை கடந்த 2013ஆம் ஆண்டில் இவர் பெற்றுள்ளார்.
இவருக்கு கல்வி நிர்வாக சேவை தரம் III கிடைத்தபோதும் தான் நேசித்த கல்லூரிக்காகவும், அங்குள்ள பிள்ளைச் செல்வங்களுக்காகவுமாய் தன்னை நாடிவந்த உயர்பதவியை ஏற்றுக்கொள்ளாமை தனது கல்லூரியின்மீது அவர் வைத்திருந்த அளப்பரிய பாசப்பிணைப்பை எடுத்துரைக்கின்றது.
இவர் தானும் உயர்ந்து தான் நேசித்த பிள்ளைகளையும் கட்டுக்கோப்புடன் கல்வித்துறையில் முன்னேற்றி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் புகழை உலகறியச் செய்தவர்.
வடக்கில் கடைசியாக நடைபெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின் நிமித்தம், பாடசாலை உள்ளக இடம்பெயர்ந்தோருக்கான முகாமாகச் செயற்பட்டபோதிலும் பாடசாலையின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் தடைபடாமல் செயற்பட்டமையானது இவரது முகாமைத்துவத்துக்குச் சான்று பகர்கின்றது.
கல்விப்பணியோடு மட்டும் தன்னை மட்டுப்படுத்திக்கொள்ளாமல், ஆதரவற்றவர்களின் காப்பகமாக விளங்கும் வவுனியா இந்து அன்பகத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், வவுனியா மத்தியஸ்த சபையின் சிரேஸ்ட உறுப்பினராகவும் விளங்கி சிறந்த சமூகசேவையாளராகவும் வலம் வருகின்றார்.
கல்லூரி அபிவிருத்திக்குழுவின் செயலாளரும், மணிவிழாக்குழு தலைவருமான செல்லத்துரை ஸ்ரீநிவாசன் தலைமையில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் 11.10.2015 இன்று நடைபெற்றபோது…
பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் லிங்கநாதன், தியாகராசா, இந்திரராசா, தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அமிர்தலிங்கம், தெற்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் இளையதம்பி,
வடக்கு உதவிக்கல்வி பணிப்பாளர் வாகீசன், கல்வி அதிகாரிகள், மதத்தலைவர்கள், கல்லூரியின் புதிய அதிபர் திருமதி கமலேஸ்வரி பாக்கியநாதன், தமிழ்மணி அகளங்கன், அதிபர்கள், சைவப்பிரகாச ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பாடசாலை சமுகத்தினர் கலந்துகொண்டு, செல்வி உமா இராசையா அவர்களின் முப்பது ஏழு வருட ஆசிரியர் – அதிபர் சேவையை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து கௌரவித்தனர்.