பழம்பெரும் நடிகை மனோரமா மாரடைப்பு காரணமாக வைத்தியாசாலையில் உயிர் இழந்தார். இவருக்கு வயது 78. அவரது உடல் நேற்று இரவு 7 மணியளவில் மைலாப்பூர் கைலாசபுரம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் 1937ம் ஆண்டு பிறந்தார். நாடக நடிகையாக வாழ்க்கையை தொடங்கிய மனோரமா, படிப்படியாக முன்னேறி திரையுலகில் நுழைந்தார்.
நகைச்சுவை வேடம், குணச்சித்திர வேடம் என மொத்தம் 1500 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தார்.
கடந்த சில காலமாக மனோரமா உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் உடல்நலம் பெற்று குணமடைந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் அவருக்கு மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டார். அங்கு இரவு 11.30 மணி அளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவரது உயிர் பிரிந்தது.
இவரது உடல் பொதுமக்களின் பார்வைக்காக தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மனோரமாவின் மரணச் செய்தி கேள்விப்பட்ட திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக வந்து மனோரமாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மாலை 4 மணியளவில் மனோரமாவிற்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு மைலாப்பூரில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமானோர் கூடி அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6.30 மணியளவில் மைலாப்பூரில் உள்ள கைலாசபுரம் மயானத்தை வந்தடைந்தது.பின்னர் 7 மணியளவில் மனோரமாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. மயானத்திற்கு வந்திருந்த மக்கள் அனைவரும் மனோரமாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியா விடை கொடுத்தனர்.