வீட்டிலிருந்த அமுக்க அடுப்பு (பிரஷர் குக்கர்) வெடித்ததால் 2 வயது பாலகியொருவர் தனது காலொன்றை இழந்த விபரீத சம்பவம் அமெரிக்க புளோரிடா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சமந்தா கொன்ஸாலெஸ் என்ற மேற்படி பாலகியின் பாட்டி சம்பவ தினம் சமையலறையில் அமுக்க அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்துள்ளார். அச்சமயம் அங்கு வந்த பாலகி அழுக்காக இருப்பதை அவதானித்த பாட்டி, சமையல் நீர் தொட்டியில் பாலகியின் உடலைக் கழுவி சுத்திகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது திடீரென அமுக்க அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் சமந்தாவுக்கு உடல் முழுவதும் கடும் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனையடுத்து பாலகி மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அந்தப் பாலகியின் மோசமாக எரிந்து கருகிய இடது கால் வெட்டி துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏனைய காலிலுள்ள விரல்களும் வெட்டி அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தில் சமந்தாவின் பாட்டிக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.