ஜேர்மனியை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனமான ‘வோக்ஸ்வேகன்’, அதன் டீசல் கார்களில் செய்த மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த மாதம் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ. மூலம் வெளிவந்தது.
இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியது. இதனையடுத்து தவறை ஒப்புக்கொண்ட அந்நிறுவனம் டீசல் கார்களில் செய்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் கார்களைக் கண்டறிந்து அவற்றின் எஞ்ஜின்களை மாற்றித் தருவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் சீனாவில் விற்பனை செய்யப்பட்ட 1950 வோக்ஸ்வேகன் டீசல் வண்டிகளை திரும்ப பெற்று, தவறுகள் சரி செய்யப்பட்டு திரும்ப அளிக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 1946 ஸ்போர்ட் வகை கார்களாகும். சீனாவில் அதிகம் விற்பனையாகும் டீசல் கார்களில் வோக்ஸ்வேகன் தயாரிப்புகள்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டிய முறைகேட்டை காரணமாக சொல்லி வோக்ஸ்வேகன் டீசல் கார்கள் விற்பனைக்கு சிங்கப்பூர் அரசு தடைவிதித்துள்ளது.